பரோலில் வந்து 15 ஆண்டுகளாக தலைமறைவு: மூதாட்டிகள் கொலை- கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட ஆயுள் தண்டனை கைதி சிக்கினார்
சிறையில் இருந்து பரோலில் வந்து 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து, மூதாட்டிகள் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட ஆயுள் தண்டனை கைதி போலீசில் சிக்கினார்.
திருமயம்,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள உலகம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சாலையில் நடந்து சென்றவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார், அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று, தீவிர விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
இது பற்றி நமணசமுத்திரம் போலீஸ் நிலையத்தில் நேற்று நிருபர்களிடம், புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் கூறியதாவது;-
சிவகங்கை மாவட்டம் ஜீவாநகர் பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் செல்வராஜ்(வயது 49). இவர் கடந்த 1996-ம் ஆண்டு காரைக்குடியில் தனது நண்பர்கள் பெருமாள், ராசு ஆகியோருடன் சேர்ந்து ஒரு பெண்ணை கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் அவர்கள் 3 பேருக்கும் கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் 2004-ம் ஆண்டு பரோலில் வெளியே வந்த செல்வராஜ் தலைமறைவானார். அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்துள்ளார்.
மேலும் பணம் தேவைப்படும்போது திருமயம் பகுதிக்கு வந்து முதியவர்களை தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு மீண்டும் சென்னைக்கு சென்று வேலை பார்த்துள்ளார்.
திருமயம் அருகே உள்ள கடியாபட்டி, பனையபட்டி பகுதிகளில் 2 மூதாட்டிகளையும், பொன்னமராவதியில் ஒரு மூதாட்டியையும் கொலை செய்துள்ளார். தற்போது மீண்டும் திருமயம் பகுதிகளில் திருட வந்தபோது போலீசில் சிக்கிக்கொண்டார். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து செல்வராஜை கைது செய்து, அவரிடம் இருந்து 22 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி உள்ளிட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களை மீட்ட போலீசார், அவரிடம் இருந்து ஒரு கத்தியை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story