அகல ரெயில் பாதைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு கேட்டு பொக்லைன் எந்திரம் சிறைபிடிப்பு


அகல ரெயில் பாதைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு கேட்டு பொக்லைன் எந்திரம் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 2 March 2019 3:15 AM IST (Updated: 2 March 2019 3:14 AM IST)
t-max-icont-min-icon

அகல ரெயில் பாதை பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு கேட்டு நிலத்தை வழங்கியவர்கள் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொள்ளிடம் டோல்கேட்,

விழுப்புரம்-திண்டுக்கல் வரை இரட்டை அகல ரெயில் பாதை அமைக்கும் வகையில், கடந்த ஆண்டு திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள கீரமங்கலம் கிராம பகுதியை சேர்ந்த பாக்கியத்தம்மாள், சுப்பிரமணியன், சண்முகம், ஜெயலட்சுமி, புஷ்பவள்ளி, இந்திராணி, தாளக்குடியை சேர்ந்த ஜெகதீசன், முருகம்பாள் உள்ளிட்ட பலருக்கு சொந்தமான 2.13 ஏக்கர் விவசாய நிலத்தை மத்திய அரசு, மாநில அரசின் உதவியோடு கையகப்படுத்தியது. அந்த நிலங்களுக்கு உரிய இழப்பீடு காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்று நிலத்தின் உரிமையாளர்கள் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் நேற்று ரெயில் பாதை அருகில் கேபிள் அமைக்கும் பணிக்காக பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டும் பணியில் ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டனர். இதையறிந்த நிலத்தின் உரிமையாளர்கள் அங்கு விரைந்து சென்று நிலத்திற்கு உரிய இழப்பீடு கிடைக்காத வரை, எங்கள் இடத்தில் குழி தோண்ட அனுமதிக்க மாட்டோம் என்று கூறி பொக் லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், இது ரெயில்வே துறைக்கு சொந்தமான நிலம். இது தொடர்பாக பிரச்சினை செய்தால், உங்களை கைது செய்ய நேரிடும் என்று கூறினர். இதனால் ரெயில்வே போலீசார் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதனைதொடர்ந்து உங்கள் கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதுவரை கேபிள் அமைப்பதற்காக குழி தோண்டும் பணி நிறுத்தி வைக்கப்படும் என்றும் ரெயில்வே போலீசார் கூறினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து திருச்சி ரெயில்வே முதுநிலை பொறியாளர் இளமான்சேகரிடம் கேட்டபோது, இரட்டை அகல ரெயில் பாதை அமைக்கும் பணிக்காக மத்திய அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீட்டை மத்திய அரசு, மாநில அரசிடம் வழங்கி விட்டது.

இந்த இழப்பீட்டு தொகைய பெறுவதற்கு நிலத்தின் உரிமையாளர்கள் மாநில அரசிடம் கோரிக்கை மனு அளித்து பெற்றுக்கொள்ள வேண்டும். இழப்பீட்டு தொகையை மத்திய அரசு கொடுத்ததன் அடிப்படையிலேயே கேபிள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது, என்று கூறினார். 

Next Story