புயல் பாதிப்புக்கு நிவாரணம் வழங்காததால் நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு - கிராம மக்கள் அறிவிப்பு


புயல் பாதிப்புக்கு நிவாரணம் வழங்காததால் நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு - கிராம மக்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 2 March 2019 4:15 AM IST (Updated: 2 March 2019 3:14 AM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டை அருகே கஜா புயல் தாக்கி 100 நாட்கள் கடந்த பிறகும் நிவாரணம் வழங்காததால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் பேனர் வைத்துள்ளனர்.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள தெற்கு பள்ளியமேடு கிராமத்தில் கஜா புயல் தாக்கி 100 நாட்கள் கடந்த பிறகும் இப் பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த தெற்கு பள்ளியமேடு கிராம மக்கள் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கூறி நேற்று பேனர் வைத்தனர்.

கஜா புயலால் வீடுகள், உடமைகள், வாழ்வாதாரங்களை இழந்த எங்களுக்கு நிவாரணம் கொடுக்க தவறிய மத்திய- மாநில அரசுகளை கண்டித்து நாங்கள் அனைவரும் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று அந்த பேனரில் குறிப்பிட்டுள்ளனர். இந்த பேனரை தில்லைவிளாகம்- வேதாரண்யம் சாலையில் உள்ள தெற்குபள்ளியமேடு கிராமம் தொடங்கும் கிளந்தாங்கி பாலம் அருகே கட்டி வைத்துள்ளனர். மேலும் புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து அப்பகுதி மக்கள் இந்த பேனர் முன் அமர்ந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கூறினர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Next Story