நாடாளுமன்ற தேர்தலையொட்டி கரூருக்கு கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிக்க ஏற்பாடு


நாடாளுமன்ற தேர்தலையொட்டி கரூருக்கு கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 2 March 2019 3:15 AM IST (Updated: 2 March 2019 4:18 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கரூருக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. இதனை துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரூர், 

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட இருப்பதால், வாக்காளர் பட்டியலில் பெயர் மாற்றம், பிழை நீக்குதல் உள்ளிட்ட பணிகள் இறுதி கட்டத்தை எட்டி விட்டன. இதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் விண்ணப்பித்தவர்களுக்கு, பெயர் மாற்றம் உள்ளிட்டவை செய்து வாக்காளர் அட்டை வழங்கும் பணிகள் நடக்கின்றன. மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில், மாவட்ட போலீஸ்துறையினர், வருவாய்த்துறையினர் உள்ளிட்டோருக்கு பணிமாறுதல் வழங்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபடுத்தும் நடவடிக்கையும் துரிதமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் இருந்து தேர்தலுக்காக, 5 மாவட்டங்களுக்கு பயன்படுத்தும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருப்பூர் மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்டன. அங்கிருந்து நேற்று கண்டெய்னர் லாரியில், தலா 250 கண்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வகையிலான 600 வி.வி.பி.ஏ.டி. எந்திரங்கள் ஆகியவை மண்மங்கலம் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டன. பின்னர் தேர்தல் பிரிவு தாசில்தார் சிவகுமார், மண்மங்கலம் தாசில்தார் ரவிகுமார் உள்பட அதிகாரிகள் முன்னிலையில் லாரியில் இருந்து அந்த எந்திரங்கள் பணியாளர்கள் மூலம் கீழே இறக்கப்பட்டன. பின்னர் மண்மங்கலம் தாசில்தால் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் அவை வைக்கப்பட்டன. இங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story