பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குளித்தலையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குளித்தலையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குளித்தலை,
கரூர் மாவட்டம், மாயனூரில் இருந்து பிரியும் தென்கரை மற்றும் கட்டளை மேட்டு வாய்க்கால்களுக்கு நிரந்தரமாக முழு அளவு தண்ணீர் பாசனத்திற்கு கொடுக்கவேண்டும். பெட்டவாய்த்தலையில் உள்ள சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆலை நிர்வாகம் மூலம் ஆலையை நடத்தமுடியவில்லையெனில் நெற்குப்பையில் சர்க்கரை ஆலையைபோல விவசாயிகளை பங்குதாரர்களாக வைத்து நடத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்த ஆண்டு வாய்க்கால்கள் அடைப்பு காலங்களில் 2 வாய்க்கால்களையும் தூர்வாரவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கையைகளை வலியுறுத்தி குளித்தலை ஆற்று பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விவசாயிகள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் முன்னேற்ற இயக்க நிர்வாகி மருதூர் சண்முகம் தலைமை தாங்கினார்.
அப்போது அங்கு வந்த உதவி செயற்பொறியாளர் சரவணன், குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது தென்கரை வாய்க்காலில் வதியம் பகுதியில் குடிமராமத்து பணி நடைபெற்று வருவதாகவும், இப்பணி ஓரளவு முடிந்த பின்னர் இரண்டு வாய்க்கால்களிலும் 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, அனைவரும் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story