கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு தொடங்கியது மாணவ-மாணவிகள் ஆர்வமாக எழுதினார்கள்


கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு தொடங்கியது மாணவ-மாணவிகள் ஆர்வமாக எழுதினார்கள்
x
தினத்தந்தி 1 March 2019 10:30 PM GMT (Updated: 1 March 2019 10:54 PM GMT)

கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. தேர்வுகளை மாணவ-மாணவிகள் ஆர்வமாக எழுதினார்கள்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு மாணவ-மாணவி களுக்கான பொதுத்தேர்வு தேதிகளை கர்நாடக பி.யூ. கல்வித்துறை வெளியிட்டது. மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை தேர்வு நடக்கும் என்று கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து பொதுத்தேர்வை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பி.யூ. கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர்.

மாநிலம் முழுவதும் மொத்தம் 1,013 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. வினாத்தாள் முன்கூட்டியே வெளியாவதை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில், நேற்று பி.யூ.சி. 2-ம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு முதல் தேர்வாக இயற்பியல் மற்றும் பொருளாதார தேர்வு நடந்தது. காலை 10.15 மணிக்கு தொடங்கிய தேர்வு 1.30 மணிக்கு முடிவடைந்தது. இந்த தேர்வை மாணவ-மாணவிகள் ஆர்வமாக வந்து எழுதினார்கள். தேர்வு நேரத்தில் பறக்கும்படை அதிகாரிகள் தேர்வு அறைகளுக்கு சென்று சோதனை நடத்தினார்கள்.

முன்னதாக, தேர்வை நன்றாக எழுத வேண்டி மாணவ-மாணவிகள் முன்கூட்டியே தேர்வு மையங்களுக்கு வந்து படித்ததை பார்க்க முடிந்தது. பலர் தங்களின் பெற்றோர் களுடன் தேர்வு மையங் களுக்கு வந்தனர். தேர்வு தொடங்குவதற்கு முன்பு அவர்கள் பெற்றோர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி சென்றனர். தேர்வு மையங்களில் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. நேற்றைய தேர்வில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை.

இன்று (சனிக்கிழமை) தேசிய திறன் தகுதி கட்டமைப்பு(என்.எஸ்.க்யூ.எப்) தேர்வுகள் நடக்கிறது. பின்னர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் தேர்வுகள் நடைபெறாது. அதன்பிறகு 4-ந் தேதி மகாசிவராத்திரி விடுமுறை தினமாகும். 5-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, அரபிக், பிரெஞ்சு ஆகிய மொழித்தேர்வுகள் நடக்க உள்ளன.

Next Story