பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் பாதிக்கப்பட்ட மாணவியின் அண்ணன்- உறவினர்கள் சப்-கலெக்டரிடம் மனு
பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் என்று பாதிக்கப்பட்ட மாணவியின் அண்ணன், உறவினர்கள் சப்-கலெக்டரிடம் மனு கொடுத்தனர். பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் ரவிக்குமாரிடம், பாதிக்கப்பட்ட மாணவியின் அண்ணன் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் நேற்று ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பொள்ளாச்சி,
திருநாவுக்கரசு, சபரிராஜன் மீது கிழக்கு போலீஸ் நிலையத்தில் எனது தங்கைக்கு பாலியல் தொந்தரவு தொடர்பாக புகார் கொடுத்தேன். இதில் எனக்கு உதவியாக இருந்த நண்பர்கள் அனைவரும் அனைத்து கட்சிகளையும் சேர்ந்தவர்கள். நாங்கள் எந்தவித அரசியல் நோக்கத்துடன் இந்த பிரச்சினையை கையாளவில்லை. என் தங்கைக்கு நேர்ந்த கொடுமை, இனிமேல் எந்தவொரு பெண்ணுக்கும் ஏற்பட கூடாது என்பதை கருத்தில் கொண்டு, அவர்களிடம் இருந்து கிடைத்த ஆதாரமான செல்போன் வீடியோக்களை பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து நடந்ததை கூறினேன். எங்களை பொறுத்தவரை போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதற்கு நாங்களும் முழுஒத்துழைப்பு அளித்து வருகின்றோம். ஆனால் இதை சிலர் அரசியல் காரணங்களுக்கு தவறாக வழி நடத்துகின்றனர். ஆகவே இந்த பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம்.
இதுபோன்ற நிலை ஏற்பட்டால் எந்தவொரு பாதிக்கப்பட்ட பெண்ணும் புகார் அளிக்க போலீஸ் நிலையத்திற்கு வரமாட்டார். எனவே எங்களுக்கும், எங்கள் குடும்பத்திற்கும் இந்த சம்பவத்தில் அரசியல் செய்யாமல் அனைவரும் பொதுமக்களோடு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஏனென்றால் எனது குடும்பம், தங்கை மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகி பாதிக்கப்பட்டு உள்ளனர். இதேபோன்று பாதிக்கப்பட்ட மற்ற பெண்களும் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருப்பார்கள். அதனால் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களை தவிர்த்து அமைதியான முறையில் எங்களுக்கும், எனது நண்பர்களுக்கும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story