சோலையார் அணையில் நீர்மட்டம் குறைந்தது தண்ணீர் கரைபுரண்ட இடம் மணல் திட்டாக மாறியது


சோலையார் அணையில் நீர்மட்டம் குறைந்தது தண்ணீர் கரைபுரண்ட இடம் மணல் திட்டாக மாறியது
x
தினத்தந்தி 2 March 2019 4:48 AM IST (Updated: 2 March 2019 4:48 AM IST)
t-max-icont-min-icon

சோலையார் அணையில் நீர்மட்டம் குறைந்து, தண்ணீர் கரைபுரண்ட இடம் மணல் திட்டாக மாறியது.

வால்பாறை,

வால்பாறை பகுதியில் கடந்த ஆண்டு மே மாத கடைசியில் தென் மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியது. ஆரம்பத்தில் குறைவாக பெய்த மழை பின்னர் படிப்படியாக கனமழையாக கொட்டியது.

இதனால் கடந்த ஆண்டு ஜுலை மாதம் 1-ந் தேதி சோலையார்அணை தனது முழு கொள்ளளவான 160 அடியை தாண்டியது. அன்று முதல் பலநாட்களாக சோலையார்அணை 160 அடியிலேயே இருந்து வந்தது. இதனை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 16-ந் தேதி முதல் பெய்த கனமழை கொட்டியது. இதனால் சோலையார்அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து இருந்து வந்தது. அணையிலும் முழு கொள்ளளவு தண்ணீர் இருந்தது.

இந்த நிலையில் தற்போது வால்பாறை பகுதியில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது.

இதனால் சமவெளிப்பகுதி மக்களின் குடிதண்ணீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கு தண்ணீர் தேவைப்பட்டதால், சோலையார் அணையிலிருந்து மின்நிலையம்-1 இயக் கப்பட்டும், மாற்றுப்பாதை வழியாகவும் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக சோலையார்அணையின் நீர்மட்டம் கிடு கிடு வென குறைந்து 50 அடியை எட்டியது. மேலும் கடுமையான வெப்பம் காரணமாக ஆறுகள், நீரோடைகள்,நீர் வீழ்ச்சிகளில் தண்ணீர் வறண்டு போய்விட்டதாலும், சோலையார்அணைக்கு தண்ணீர் வரத்து நின்று போனது. இதனால் சோலையார்அணையில் தண்ணீர் கரைபுரண்ட நீர் பிடிப்பு பகுதிகள் வறண்டு போய் மணல் திட்டுகளாக காட்சியளிக்கின்றன.

இந்த நிலையில் நடப்பு மாதத்தில் எப்போதும் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடைமழை பெய்வது வழக்கம். ஆகவே தற்போது இந்த மழை பெய்தாலும், மேலும் ஜூன் மாதம் கிடைக்கவேண்டிய தென்மேற்கு பருவமழையும் பெய்தால் சோலையார் அணைக்கு தண்ணீர் வரத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தற்போது அணையில் இருக்கிற தண்ணீரை இன்னும் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே மின்உற்பத்திக்கு பயன்படுத்த முடியும். அதன் பிறகு பரம்பிக்குளம் அணைக்கும் தண்ணீர் திறந்துவிடுவதற்கு வாய்ப்பு இருக்காது.

வால்பாறை பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் இறுதிவரை கிடைத்த கனமழையின் தண்ணீர் முழுவதையும் தேக்கி வைத்து பரம்பிக்குளம் அணைக்கும் அதன் வழியாக ஆழியார் அணைக்கும் திருமூர்த்தி அணைக்கும் தண்ணீரை வழங்கிய சோலையார் அணை தற்போது நீர்மட்டம் குறைந்து வறட்சியின் தாக்கத்தை நோக்கி செல்வது கவலை அளிப்பதாக உள்ளது. இனி வருகிற ஜூன் மாதம் பெய்யும் தென்மேற்கு பருவமழை தான் நம்பிக்கையாக உள்ளது என்கின்றனர் பொதுமக்கள்.

Next Story