ஆரல்வாய்மொழி அருகே, டாஸ்மாக் காவலாளியை அரிவாளால் வெட்டி, மதுபாட்டில்கள் கொள்ளை


ஆரல்வாய்மொழி அருகே, டாஸ்மாக் காவலாளியை அரிவாளால் வெட்டி, மதுபாட்டில்கள் கொள்ளை
x
தினத்தந்தி 2 March 2019 4:00 AM IST (Updated: 2 March 2019 5:02 AM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி அருகே டாஸ்மாக் காவலாளியை அரிவாளால் வெட்டி ரூ.73 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளை யடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஆரல்வாய்மொழி,

தாழக்குடியில் இருந்து வேம்பத்தூர் செல்லும் சாலையில் சானல் கரையோரம் உள்ள தோட்டத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் பார்வதிபுதூர் பகுதியை சேர்ந்த குமார் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். விற்பனையாளராக 8 பேர் உள்ளனர்.

இந்த கடை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் இருப்பதால், இங்கு சந்தவிளையை சேர்ந்த மாற்றுத்திறனாளியான பாஸ்கர் (வயது 32) என்பவர் காவலாளியாக வேலை செய்து வருகிறார். மேலும், கடையில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. கடையில் தினமும் வியாபாரம் முடிந்தபின் மேற்பார்வையாளர் கடையை பூட்டிவிட்டு வசூல் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு செல்வது வழக்கம்.

அதேபோல் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின் மேற்பார்வையாளர் கடையை பூட்டிவிட்டு பணத்தை எடுத்துக்கொண்டு சென்றார். பின்னர், இரவு காவல் பணியில் பாஸ்கர் ஈடுபட்டிருந்தார்.

நேற்று காலையில் ஒரு பெண் கடையின் அருகே கிடக்கும் காலி மது பாட்டிகளை சேகரிப்பதற்காக சென்றார். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடந்ததையும், காவலாளி பாஸ்கர் அரிவாளால் வெட்டப்பட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார். மேலும், இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் ஆரல்வாய்மொழி சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ்வர ராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். மேலும், கைரேகை நிபுணர்களும் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

விசாரணையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் பணியில் இருந்த காவலாளி பாஸ்கரை அரிவாளால் வெட்டிவிட்டு, கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்துள்ளனர். பின்னர் அங்கிருந்த ரொக்கப்பணம் 3 ஆயிரம் மற்றும் ரூ.73 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளையடித்துக்கொண்டு தாங்கள் வந்த வாகனத்தில் தப்பி சென்றது தெரிய வந்தது. மேலும் அங்கேயே 2 மூடைகளில் மது பாட்டில்களாக இருந்தது. மர்ம நபர்கள் கொள்ளையடிக்கும் போது, ஆள் வருவது போல் சத்தம் கேட்டதால், அந்த 2 மூடைகளையும் விட்டு சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story