அனைவரும் உயர்கல்வி கற்க மத்திய, மாநில அரசுகள் அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் பேச்சு
அனைவரும் உயர்கல்வி கற்க மத்திய, மாநில அரசுகள் அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் கூறினார்.
வேலூர்,
வேலூர் மாவட்ட தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன், மேல்நிலை, சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள் சங்கம் வேலூர் மாவட்டம் சார்பில் வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதனுக்கு முத்துவிழா மற்றும் சிறந்த ஆசிரியர்கள், சிறந்த பள்ளிகள், கடந்தாண்டு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு விருது வழங்கும் விழா வேலூரில் நேற்று நடந்தது. விழாவுக்கு சங்க மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ராமானுஜம், பொருளாளர் ராஜசேகர், அமைப்பு செயலாளர் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் தெய்வசிகாமணி வரவேற்றார்.
இதில், சிறப்பு அழைப்பாளர்களாக வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன், வருமான வரித்துறை இணை ஆணையர் வி.நந்தகுமார், நடிகை தேவயாணி ஆகியோர் கலந்துகொண்டு சிறந்த ஆசிரியர், சிறந்த பள்ளிகள், பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கினர்.
பின்னர் வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது:-
வேலூர் மாவட்டம் கல்வியறிவில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் 1½ கோடி பேர் கல்வி கற்கிறார்கள். அரசு பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் இடையே கல்வி கற்பிப்பதில் போட்டி உள்ளது. அதில், அரசுப்பள்ளிகள் ஓரளவுதான் வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு அவரின் பெற்றோரும், ஆசிரியர்களும் தான் காரணம். இந்தியாவில் 25 சதவீதம் பேர் தான் உயர்கல்வி கற்கிறார்கள். அனைவரும் உயர்கல்வி கற்க மத்திய, மாநில அரசுகள் அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்தியாவின் மொத்த வருவாயில் 4 சதவீதம் கூட கல்விக்கு ஒதுக்கப்படவில்லை.
அறியாமையை போக்க அனைவரும் கல்வி கற்க வேண்டும். 40 நாடுகளில் உயர்கல்வி இலவசமாக அளிக்கப்படுகிறது. அதேபோன்று நம்முடைய நாட்டிலும் உயர்கல்வி அளிக்கப்பட வேண்டும். நாடு உயர வேண்டும் என்றால் அனைவரும் உயர்கல்வி கற்க வேண்டும். ஆசிரியர் பணி தொழில் அல்ல. அது மாணவர்களுக்கு ஆற்றும் சேவை ஆகும். ஆசிரியர்களால் தான் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், சங்க நிர்வாகிகள் பலர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக சிறப்பு அழைப்பாளர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டன. முடிவில் மாவட்ட செயலாளர் நரேந்திரன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story