குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பெண்கள் தர்ணா தொட்டிக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்ததால் பரபரப்பு
சீராக குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தொட்டிக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஒன்றியம் கொண்டேப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது தானப்பட்டி. இந்த கிராமத்தில் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு கடந்த 3 மாதங்களாக குடிநீர் சரியாக வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இது தொடர்பாக பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ள இடத்திற்கு திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் தொட்டிக்கு மாலை அணிவித்து அந்த இடத்தில் ஒப்பாரி வைத்து அதிகாரிகளை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில் தங்கள் பகுதிக்கு சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story