ஈரோடு மேம்பாலத்தில் குறுக்கும் நெடுக்குமாக செல்லும் வாகனங்கள் நடுவில் தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை


ஈரோடு மேம்பாலத்தில் குறுக்கும் நெடுக்குமாக செல்லும் வாகனங்கள் நடுவில் தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 3 March 2019 3:45 AM IST (Updated: 3 March 2019 12:24 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மேம்பாலத்தில் வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாக செல்வதால் பாலத்தின் நடுவில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு,

ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. பிரப்ரோடு–பெருந்துறை ரோடு, ஈ.வி.என்.ரோட்டை இணைக்கும் வகையில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தை கடந்த 28–ந் தேதி தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து பாலத்தின் வழியாக வாகன போக்குவரத்து தொடங்கியது. நேற்று முன்தினம் பகலில் வாகன போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

திறப்பு விழாவுக்காக பாலத்தின் மீது கட்டப்பட்டு இருந்த அலங்கார வளைவுகள், வாழை மரங்கள், கட்சிக்கொடிகள், மின்விளக்குகள் ஆகியன அகற்றப்பட்டன. அதன்பிறகு வழக்கம்போல் வாகன போக்குவரத்துக்காக பாலம் திறந்து விடப்பட்டது. நேற்று காலையில் இருந்தே ஏராளமான வாகனங்கள் பாலத்தின் வழியாக சென்றன. இதில் இருசக்கர வாகனங்களும், கார்களும் அதிக அளவில் சென்றன. பொதுமக்கள் பலர் புதிய பாலத்தை பார்க்கும் ஆர்வத்தில் பாலத்தின் மீது இருசக்கர வாகனங்களில் சென்றதை காணமுடிந்தது.

ஈரோடு பிரப் ரோட்டில் இருந்து பெருந்துறை ரோட்டுக்கு சென்று வரும் வகையில் இருவழிச்சாலையாகவும், பிரப் ரோட்டில் இருந்து ஈ.வி.என்.ரோட்டை நோக்கி ஒரு வழிச்சாலையாகவும் மேம்பாலத்தின் போக்குவரத்து அமைந்துள்ளது. ஆனால் பெருந்துறை ரோட்டில் இருந்து மேம்பாலத்திற்கு வந்த வாகனங்கள் விதிமுறையை மீறி ஈ.வி.என்.ரோட்டை நோக்கி திரும்பின. இதனால் பாலத்தின் மேல் பகுதியில் வாகனங்கள் திரும்பாமல் நேராக செல்ல வேண்டும் என்று 3 இடங்களில் அறிவிப்பு பலகைகள் மற்றும் பேரிகார்டர்களும் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் சாலை விதிமுறையை மீறி வாகன ஓட்டிகள் பலர் பேரிகார்டர்களை கடந்து சென்று வாகனத்தை திருப்பி ஈ.வி.என்.ரோடு வழியாக சென்றனர்.

வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்துவதற்காக மேம்பாலத்தின் மேல் பகுதியில் 2 போலீசார் பணிஅமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்கள் விதிமுறையை மீறி செல்லும் வாகன ஓட்டிகளை அழைத்து, பெருந்துறை ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் ஈ.வி.என்.ரோட்டில் திரும்பி செல்லக்கூடாது என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இதேபோல் பிரப் ரோட்டில் பாலம் தொடங்கும் பகுதியிலும் வாகன ஓட்டிகள் குறுக்கும் நெடுக்குமாக செல்கிறார்கள். அதாவது எஸ்.கே.சி. ரோட்டில் இருந்து பிரப் ரோட்டிற்கு வரும் வாகனங்கள் இடதுபுறமாக திரும்பி பாலத்தின் கீழ் பகுதி வழியாக செல்ல வேண்டும். ஆனால் இருசக்கர வாகனங்களும், கார்களும் விதியை மீறி பாலத்தின் மேல் பகுதியில் செல்கின்றனர். இதனால் மேம்பாலம் தொடங்கும் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாக செல்லாமல் இருக்கவும், விபத்து ஏற்படுவதை தடுக்கவும் மேம்பாலத்தின் நடுவில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story