பர்கூர் மலைகிராமத்தில் பரபரப்பு வீட்டின் முன்பு கட்டியிருந்த பசுமாட்டை சிறுத்தை கடித்து கொன்றது பொதுமக்கள் பீதி


பர்கூர் மலைகிராமத்தில் பரபரப்பு வீட்டின் முன்பு கட்டியிருந்த பசுமாட்டை சிறுத்தை கடித்து கொன்றது பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 3 March 2019 4:00 AM IST (Updated: 3 March 2019 12:24 AM IST)
t-max-icont-min-icon

பர்கூர் மலைகிராமத்தில் வீட்டின் முன்பு கட்டியிருந்த பசுமாட்டை சிறுத்தை கடித்து கொன்றது. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளார்கள்.

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் உள்ளது ஈரெட்டி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 50). விவசாயி. 4 பசுமாடுகளும் வளர்த்து வந்தார். இந்த மாடுகளை நாள்தோறும் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வார். பின்னர் மாலையில் வீட்டின் முன் உள்ள தொழுவத்தில் கட்டிவிடுவார். வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலையும் தொழுவத்தில் 4 மாடுகளை கட்டியிருந்தார். பின்னர் இரவு 9 மணி அளவில் குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டுவிட்டு நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தார்கள்.

இந்தநிலையில் இரவு 11.30 மணி அளவில் தொழுவத்தில் இருந்த மாடுகள் கத்தும் சத்தம் கேட்டது. இதனால் தூக்கம் கலைந்து எழுந்த சண்முகம் கதவை திறந்துகொண்டு வெளியே வந்து தொழுவத்தை பார்த்தார். அப்போது ஒரு பசுமாட்டை சிறுத்தை ஒன்று கடித்து குதறிக்கொண்டு இருந்தது. மற்ற 3 பசுமாடுகளும் பயந்து அங்கே, இங்கே என்று தொழுவத்துக்குள்ளேயே ஓடிக்கொண்டு இருந்தன. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சண்முகம் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். அவர்கள் தீப்பந்தங்களுடன் ஓடிவந்தார்கள். பின்னர் அனைவரும் சத்தம்போட்டும், தீப்பந்தங்களை காட்டியும் சிறுத்தையை காட்டுக்குள் விரட்டினார்கள். ஆனாலும் சிறுத்தை கடித்ததில் பசுமாடு பரிதாபமாக செத்துக்கிடந்தது.

இதுபற்றி பர்கூர் வனச்சரகர் மணிகண்டனுக்கு சண்முகம் நேற்று காலை தகவல் கொடுத்தார். அதன்பேரில் மணிகண்டன் வனத்துறையினருடன் அங்கு வந்து பார்த்தார். பின்னர் அவர் சண்முகத்திடம் இறந்த பசுமாட்டுக்கு உரிய இழப்பீட்டு தொகையை அரசிடம் இருந்து பெற்றுத்தருவதாக கூறினார். மேலும் வனத்துறையினர் பொதுமக்களிடம் கூறும்போது, ‘ஈரெட்டி கிராமம் வனப்பகுதியை ஒட்டியுள்ளது. அதனால் விலங்குகள் வருவதை முற்றிலும் தடுக்க முடியாது. நாம்தான் பாதுகாப்பாக இருக்கவேண்டும். ஆடு, மாட்டு தொழுவங்களை மூங்கில் தடுப்புகள் கொண்டு நன்றாக அடையுங்கள். இரவு நேரங்களில் யாரும் வெளியே வரவேண்டாம். வீடுகளின் முன்பு இரவு நேரங்களில் மின்விளக்கை ஒளிர விடுங்கள்‘ என்றார்கள். எனினும் ஈரெட்டி கிராம மக்கள் பீதியில் உள்ளார்கள்.


Next Story