தஞ்சையில், தாறுமாறாக ஓடிய கார் மோதி ஆட்டோ டிரைவர் பலி வாலிபர் படுகாயம்


தஞ்சையில், தாறுமாறாக ஓடிய கார் மோதி ஆட்டோ டிரைவர் பலி வாலிபர் படுகாயம்
x
தினத்தந்தி 3 March 2019 4:30 AM IST (Updated: 3 March 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில், தாறுமாறாக ஓடிய கார் மோதி ஆட்டோ டிரைவர் பலியானார். வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ஆரோக்கியநகரை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவருடைய மகன் பாலகுரு(வயது38). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று பிற்பகல் இ.பி.காலனி பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு ஆட்டோவில் அமர்ந்து இருந்தார்.

அவருடன் நா.வல்லுண்டான்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜா(35) என்பவரும் அமர்ந்து இருந்தார். அப்போது அந்த வழியாக கார் ஒன்று தாறுமாறாக வந்தது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், முதலில் ஒரு ஆட்டோ மீது மோதியது. சத்தம்கேட்டு வெளியே எட்டி பார்ப்பதற்குள் பாலகுரு, ராஜா ஆகியோர் அமர்ந்து இருந்த மற்றொரு ஆட்டோ மீது கார் மோதியது.

அப்படியும் கார் நிற்காமல் சாலையோரம் நின்ற தள்ளுவண்டி மீது மோதி நின்றது. இந்த விபத்தில் பாலகுரு, ராஜா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே பாலகுரு பரிதாபமாக இறந்தார். ராஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து பற்றி தகவல் அறிந்தவுடன் பொதுமக்கள் கூடியதால் நாஞ்சிக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை அறிந்த தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் விரைந்து வந்து விபத்தை ஏற்படுத்திய காரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

காரை ஓட்டி வந்தவரை பிடித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான பாலகுருவுக்கு பத்மா என்ற மனைவியும், 1½ வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

Next Story