வீராணம் ஏரி நீர்மட்டம் 45.50 அடியாக குறைந்தது


வீராணம் ஏரி நீர்மட்டம் 45.50 அடியாக குறைந்தது
x
தினத்தந்தி 3 March 2019 3:00 AM IST (Updated: 3 March 2019 12:54 AM IST)
t-max-icont-min-icon

வீராணம் ஏரியின் நீர்மட்டம் 45.50 அடியாக குறைந்தது.

காட்டுமன்னார்கோவில், 

காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. 47.50 அடி கொள்ளளவு கொண்ட ஏரியில், 34 மதகுகள் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் நிலம் பாசனம் பெற்று வருகிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஏரிக்கு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் வருவது வழக்கம்.

கடந்த ஆண்டில் கர்நாடக மாநிலத்தில் பெய்த பருவமழையால், காவிரியில் அதிகப்படியான தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக, வீராணம் ஏரிக்கும் குறித்த காலத்தில் தண்ணீர் வந்து முழு கொள்ளளவை எட்டியது.

தொடர்ந்து விவசாயம் மற்றும் சென்னை மக்களின் குடிநீர் தேவைகளை கருத்தில் கொண்டு, அவ்வப்போது ஏரியின் நீர்மட்டம் குறையும் நேரங்களில் கீழணையில் தேக்கி வைக்கப்பட்டு இருக்கும் நீர் வடவாறு வழியாக திறந்து விடப்பட்டு ஏரியின் நீர்மட்டத்தை, உயர்த்தும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியதால், கீழணையில் இருந்து ஏரிக்கு திறந்துவிடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் பாசனத்திற்கு அதிகளவில் தண்ணீர் தேவைப்படாமல் போனாலும், சென்னைக்கு குடிநீருக்காக தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் வெயில் வாட்டி வருவதால் ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. அதாவது, நேற்று 45.50 அடியாக நீர்மட்டம் இருந்தது. சென்னைக்கு 74 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்பட்டது.

கோடை வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என்பதால், நீர்மட்டம் வேகமாக குறையும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் நெல் அறுவடை செய்த விவசாயிகள் அடுத்த பயிர் சாகுபடி செய்ய தேவையான தண்ணீர் ஏரியில் இருக்குமா என்பது கேள்விக்குறியே.

அதே நேரத்தில் சென்னையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் ஏரியில் நீர்மட்டம் 39 அடி வரைக்கும் இருந்தால் மட்டுமே தண்ணீரை அனுப்ப முடியும். எனவே ஏரியின் நீர்மட்டம் குறையாமல் இருக்க கீழணையில் இருந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால் 9 அடி கொள்ளளவு கொண்ட கீழணையில் தற்சமயம் 7 அடியே தண்ணீர் இருப்பு இருக்கிறது. மேலணையில் இருந்தும் தண்ணீர் வரத்து என்பது இல்லை. ஆகையால், கீழணையிலும் நீர்மட்டம் குறையும் அபாய நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதுபோன்ற காரணங்களால், கோடை காலத்தை எவ்வாறு சமாளிக்க போகிறோம் என்று தெரியாமல் கடைமடை பகுதி விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Next Story