முதியவரை தாக்கி கணினி-கேமரா கொள்ளை; 3 பேர் கைது


முதியவரை தாக்கி கணினி-கேமரா கொள்ளை; 3 பேர் கைது
x
தினத்தந்தி 3 March 2019 3:45 AM IST (Updated: 3 March 2019 1:02 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே முதியவரை தாக்கி கணினி, கேமரா ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாலியமங்கலம்,

தஞ்சை அருகே உள்ள நத்தம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது67). ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவர் கடந்த மாதம் (பிப்ரவரி) வெளியூருக்கு சென்றிருந்தார். அப்போது அவர் தனது நண்பர் தோழ வன்னியன் குடிகாடு கிராமத்தை சேர்ந்த கோபால்சாமி (60) என்பவரிடம் வீட்டை பார்த்துக்கொள்ளும்படி கூறினார்.

அதன்படி கோபால்சாமி, மாணிக்கத்தின் வீட்டில் இரவு தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டுக்கு வந்த சிலர் கோபால்சாமியை கம்பியால் தாக்கினர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து நகைகளை கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் அங்கு நகைகள் இல்லாததால், டி.வி., கண்காணிப்பு கேமரா ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாணிக்கம் அம்மாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரெத்தினம், சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பொன்.ஸ்ரீதரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் தஞ்சை மாவட்டம் மணல்மேடு பகுதியை சேர்ந்த சித்திரகுமார் (25), மாத்தூரை சேர்ந்த மணிகண்டன் (35), சிவசாமி(56) ஆகிய 3 பேரும் சேர்ந்து கோபால்சாமியை தாக்கி கொள்ளையடித்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து டி.வி., கண்காணிப்பு கேமரா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 

Next Story