நாமக்கல்லில் கார் டிரைவர் மர்மசாவு சாக்கடை கால்வாயில் பிணம் மீட்பு


நாமக்கல்லில் கார் டிரைவர் மர்மசாவு சாக்கடை கால்வாயில் பிணம் மீட்பு
x
தினத்தந்தி 3 March 2019 4:45 AM IST (Updated: 3 March 2019 1:08 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் சாக்கடை கால்வாயில் கார் டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது பிணத்தை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல், 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கருத்தபுளியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் அருண் பாண்டியன் (வயது 27). கார் டிரைவர். இவர் நாமக்கல் அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த செங்கோட்டுவேலு என்பவரிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கார் டிரைவராக பணியாற்றி வந்தார்.

தற்போது மீண்டும் வேலை கேட்டு காளப்பநாயக்கன்பட்டி வந்த அருண் பாண்டியன் கடந்த 3 நாட்கள் செங்கோட்டுவேலு வீட்டில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் நாமக்கல்லில் நண்பர் ஒருவர் விபத்தில் இறந்து விட்டதாக கூறிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே அருண் பாண்டியன் நாமக்கல் காவேட்டிப்பட்டி பகுதியில் சாக்கடை கால்வாயில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் நாமக்கல் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அருண் பாண்டியன் அளவுக்கு அதிகமாக மது குடித்து போதையில் தடுமாறி கீழே விழுந்து இறந்து இருக்கலாம் என்பது தெரியவந்து உள்ளது. இருப்பினும் பிரேத பரிசோதனைக்கு பிறகே அவர் தடுமாறி கீழே விழுந்து இறந்தாரா? இல்லை எனில் கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story