திருச்சியில் முந்திச்செல்லும் போட்டியில் தனியார் பஸ்கள் மோதல்; பயணிகள் காயம்


திருச்சியில் முந்திச்செல்லும் போட்டியில் தனியார் பஸ்கள் மோதல்; பயணிகள் காயம்
x
தினத்தந்தி 2 March 2019 11:00 PM GMT (Updated: 2 March 2019 7:50 PM GMT)

திருச்சியில் முந்திச்செல்லும் போட்டியில் தனியார் பஸ்கள் மோதிக்கொண்டன. இதில் பயணிகள் காயம் அடைந்தனர். இது குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

திருச்சி,

திருச்சி மாநகர பகுதிகளில் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் உள்பட அனைத்து நாட்களிலும் போலீசார் ஆங்காங்கே நின்று வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் சோதனையில் ஈடுபடுகிறார்கள். வாகன ஓட்டிகளின் உயிர் காக்கும் பொருட்டும், விபத்துகளை தடுக்கும் வகையிலும் வாகன சோதனை நடத்தப் படுவதாக போலீசார் கூறுகிறார்கள். ஆனால் மாநகருக்குள் அதிக வேகத்தில் செல்லும் தனியார் பஸ்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. அவ்வாறு செல்லும் பஸ்கள் மீது காவல்துறையினர் ஏன்? நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்நிலையில் நேற்று மதியம் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து மத்திய பஸ் நிலையம் நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக 2 தனியார் பஸ்கள் சென்று கொண்டு இருந்தன. பாலக்கரை பகுதியை கடந்ததும், இரு பஸ்களும் ஒன்றை ஒன்று முந்தி செல்லும் நோக்கத்தில் அதிக வேகத்தில் சென்றன. இதனை கண்ட வாகனஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த இரு பஸ்களும் தலைமை தபால் நிலையத்தை கடந்து பாரதியார் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே சென்றபோது, பக்கவாட்டில் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. அங்கு பள்ளி முன்பு ஏராளமான மாணவ-மாணவிகளும் நின்று கொண்டு இருந்தனர்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக மாணவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. பஸ்கள் மோதிக்கொண்டதில் பக்கவாட்டு கண்ணாடி உடைந்து நொறுங்கியது. ஒரு சில பயணிகள் லேசான காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை கண்ட பொதுமக்கள் ஆவேசம் அடைந்தனர். மாநகரில் தனியார் பஸ்கள் எப்போதும் இதுபோல் தான் கட்டுப்பாடு இல்லாமல் சென்று வருகின்றன. மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க ஆர்வம் காட்டும் போலீசார் தனியார் பஸ்களை கண்டு கொள்வதில்லை என்று குற்றம்சாட்டினர். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று இரு தனியார் பஸ்களின் டிரைவர்களையும் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இதையடுத்து விபத்துக்குள்ளான பஸ்சில் இருந்த பயணிகள் மாற்று பஸ்சில் புறப்பட்டு சென்றனர். 

Next Story