1,500 அரசு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை வீட்டு கடன்களுக்கு 5 சதவீத வட்டி தள்ளுபடி


1,500 அரசு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை வீட்டு கடன்களுக்கு 5 சதவீத வட்டி தள்ளுபடி
x
தினத்தந்தி 3 March 2019 5:00 AM IST (Updated: 3 March 2019 1:40 AM IST)
t-max-icont-min-icon

1,500 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும். வீட்டு கடன்களுக்கு 5 சதவீத வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று தாக்கல் செய்தார். அப்போது சில சலுகைகளும் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து நாராயணசாமி கூறியதாவது:–

புதுவை அரசால் இலவச மனைப்பட்டா பெறுபவர்களுக்கும், ஏழைகளுக்கும் சொந்த வீடு கட்ட பெருந்தலைவர் காமராஜர் வீட்டுவசதி திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் முறையே ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.1 ½ லட்சம் என மொத்தம் ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது. ஆனால் ஒரு வீடு கட்டுவதற்கு தற்போது சராசரியாக ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவு ஆகிறது. எனவே வீடு கட்டும் ஏழைகள் தனியாரிடம் கடன் வாங்கி வட்டி கொடுமையால் அவதியுறுவது அரசின் கவனத்துக்கு வந்தது.

இதனை நீக்கும்பொருட்டு இலவச மனைப்பட்டா பெறுபவர்கள் மற்றும் ஏழைகள் சொந்த வீடு கட்டுவதற்கு கூடுதலாக தேவைப்படும் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையிலான தொகை குடிசை மாற்று வாரியம், தேசிய வங்கிகளின் மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்படி வீடு கட்ட கடன் வாங்கியதற்கான தொகையை சம்பந்தப்பட்டவர்கள் 5 ஆண்டுகளில் திரும்ப செலுத்த வேண்டும். இந்த கடன் தொகைக்கு 5 சதவீத வட்டி தள்ளுபடி செய்யப்படும். இந்த திட்டத்தின் மூலம் சுமார் 6 ஆயிரம் குடும்பங்கள் பலனடையும். இதற்காக எனது அரசு ரூ.20 கோடி வரை ஒதுக்க முடிவு செய்துள்ளது.

அட்சய பாத்திரா தொண்டு நிறுவனத்துடன் இணைந்து வரும் 2019–20ம் கல்வியாண்டு முதல் சிறப்பான முறையில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகளின் அறிவுத்திறனை மேம்படுத்தவும், திறமைகளை வெளிக் கொண்டு வரவும் 2019–20ம் ஆண்டில் ஒரு புதிய தொலைநோக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். பள்ளிக் கல்வித்துறையில் புதிதாக கல்வித்தரவுகள் திட்டம் செயல்படுத்தப்படும்.

ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனி, அரபு ஆகிய மொழிகளை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான மொழிப்பயிற்சி அளிக்கப்படும். புதுவை அரசின் பல துறைகளில் காலியாக உள்ள 1,500 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் 2019–20ம் நிதியாண்டில் நிரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அரசு பணியாளர்களை தேர்வு செய்ய புதுச்சேரி பணியாளர் தேர்வு வாரியம் புதிதாக அமைக்கப்படும். ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரி, ஜவகர்லால் நேரு வேளாண் கல்லூரி இரண்டையும் உள்ளடக்கிய புதுச்சேரி வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

புதுவை என்ஜினீயரிங் கல்லூரி 2019–20ம் நிதியாண்டில் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்படும். இதில் காரைக்காலில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் தொழில்நுட்ப கல்லூரிக்கான புதிய வளாகம் அமைப்பதும் அடங்கும். இதற்காக சுமார் ரூ.50 கோடி செலவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடர்ந்து மின்னணுவியல் துறையில் புதிதாக 5 பில்லியன் டாலர் முதலீடுகளை ஈர்க்க விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதன்மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு உள்ளூரிலேயே புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

புதுச்சேரிக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர். இதனை மாற்றி அமைப்பதற்காக வாரம் முழுவதும் சுற்றுலா என்ற இலக்குடன் சுற்றுலாத்துறை செயல்பட உள்ளது. இதையொட்டி சுற்றுலா திட்ட அம்சங்களை நிறைவேற்ற பயண நிறுவ னங்கள், வழிகாட்டிகளுக்கு ரூ.1 கோடி கூடுதலாக வழங்கப்படும். தனியார் பங்களிப்புடன் புதிய திட்டங்களை செயல்படுத்தவும் சுற்றுலாத்துறையில் பூர்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பொலிவுறு நகர திட்டம், பிரெஞ்சு இந்திய வளர்ச்சி திட்டத்தில் மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர வளர்ச்சித்துறை நடத்திய புதுமையான, நிலையான, ஆய்வு திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான போட்டியில் நமது மாநிலம் வெற்றிபெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர வளர்ச்சித்துறை புதுவை மாநிலத்திற்கு ரூ.114.60 கோடி வழங்க உள்ளது.

இதன் மூலம் நகர பகுதிகளில் உள்ள குடிசை வாழ் மக்களின் குடியிருப்பு பகுதிகள் மேம்படுத்தப்படும். மேலும் மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர வளர்ச்சித்துறை மூலம் ரூ.26 கோடி செலவில் பொதுசேவை அமைப்புகளை வலுப்படுத்தி, மக்களின் அடிப்படை சேவைகளை பூர்த்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் ரூ.140.60 கோடி செலவில் 2019–20ம் நிதியாண்டில் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார்.


Next Story