புதுவை சட்டசபையில் காங்கிரஸ்–பா.ஜனதா மோதல்
புதுவை சட்டசபையில் காங்கிரஸ், பாரதீய ஜனதா இடையே மோதல் ஏற்பட்டது.
புதுச்சேரி,
புதுவை சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்திய வீரர் அபிநந்தன் விடுதலை குறித்து முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:–
நாராயணசாமி: ஜம்மு காஷ்மீர் பகுதியில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தீவிரவாதிகள் செயல்பட்டு வரும் நிலையில் மத்தியில் ஆட்சியில் இருக்கும் அரசுகள் தொடர்ந்து தகுந்த நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு கொடுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு புலவாமா பகுதியில் துணை ராணுவ வீரர்கள் வாகனங்களில் வரும்போது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 40 துணை ராணுவப்படையினர் பலியானார்கள். அதைத்தொடர்ந்து இந்திய ராணுவம் தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தி அளித்தது. இந்த தாக்குதலின்போது இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் எல்லையில் விழுந்துவிட்டார்.
அவரை பாகிஸ்தான் ராணுவம் பிடித்துக்கொண்டது. அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க நாடு முழுவதும் மக்கள் மத்திய அரசை வலியுறுத்தினார்கள். பிரார்த்தனைகளும் நடந்தன. தற்போது அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். விமானப்படை வீரர் அபிநந்தனின் துணிச்சலை பாராட்டும் பொறுப்பு நமக்கு உள்ளது. அதுமட்டுமின்றி நமது ராணுவம், கப்பல், விமானப்படை வீரர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.
சாமிநாதன் (பா.ஜனதா):– இந்திய வரலாற்றில் துணிச்சல் மிக்க நடவடிக்கையை பிரதமர் மோடி எடுத்துள்ளார். மேலும் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், ராணுவ மந்திரி நிர்மலா சீத்தாராமன் ஆகியோரை பாராட்டுங்கள். நீங்கள் பேசுவது பாகிஸ்தானை பாராட்டுவதுபோல் உள்ளது.
இவ்வாறு சாமிநாதன் எம்.எல்.ஏ. பேசியதும் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, அரசு கொறடா அனந்தராமன் ஆகியோர் ஒட்டுமொத்தமாக எழுந்து, தேர்தலுக்காக நீங்கள் பேசுகிறீர்கள். நாடகம் போடவேண்டாம் என்று கூறினார்கள்.
அவர்களது கருத்துக்கு பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் எதிர்த்து வாதிட, காங்கிரசார் அதற்கு பதில் அளித்தனர். அதனால் சட்டசபையில் கூச்சலும் குழப்பமுமாக இருந்தது.
அப்போது முதல்–அமைச்சர் நாராயணசாமி எழுந்து, தயவு செய்து ஒன்றை புரிந்துகொள்ளுங்கள், ராணுவ வீரர்களின் வீரத்தை கொச்சைப்படுத்த வேண்டாம். இதை வைத்து அரசியல் செய்யவேண்டாம் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தை மேலும் அனுமதிக்காத சபாநாயகர் வைத்திலிங்கம் அடுத்த அலுவலுக்கு சென்றார்.