கீரமங்கலம் பகுதியில் மின் இணைப்பிற்காக காத்திருக்கும் விவசாயிகள்


கீரமங்கலம் பகுதியில் மின் இணைப்பிற்காக காத்திருக்கும் விவசாயிகள்
x
தினத்தந்தி 3 March 2019 4:15 AM IST (Updated: 3 March 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

கீரமங்கலம் பகுதியில் மின் இணைப்பிற்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிழக்கு பகுதியில் உள்ள ஆலங்குடி, அறந்தாங்கி பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே வருவதால் விவசாயிகள் ஆழ்குழாய்களை அமைத்து தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். தொடக்கத்தில் 300 அடி ஆழம் வரை அமைக்கப்பட்ட ஆழ்குழாய்கள் தற்போது வடகாடு, கொத்தமங்கலம், மறமடக்கி, குளமங்கலம், சேந்தன்குடி மற்றும் பல கிராமங்களில் ஆயிரத்து 100 அடி ஆழம் வரை அமைக்க வேண்டியுள்ளது. ரூ.10 லட்சம் வரை விவசாயிகள் கடன் வாங்கி செலவு செய்து ஆழ்குழாய்கள் அமைத்துள்ளனர். அதிலும் விவசாயத்தை நம்பி கடன் வாங்கி ஆழ்குழாய் அமைத்த விவசாயிகள் புயலில் பயிர்கள் அழிந்ததால் கடனை கட்ட முடியாமலும் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு தமிழக அரசு விவசாயிகளுக்கு உடனடியாக ஆழ்குழாய்க்கான மின் இணைப்பு பெற தட்கல் முறையில் விண்ணப்பம் பெற்றது. அந்த விண்ணப்பங்களும் சில நாட்களில் நிறுத்தப்பட்டாலும் விண்ணப்பித்தவர்களுக்கும் இன்னும் மின் இணைப்பு கிடைக்கவில்லை. அதே போல விளை பயிர்கள், மரங்கள் தண்ணீர் இன்றி அழிந்துவிடக் கூடாது என்று அவற்றை காப்பாற்ற, விவசாயிகள் மீட்டர் கட்டண முறையிலான மின் இணைப்பு உடனடியாக கிடைக்கும் என்று நம்பி ஆழ்குழாய்களை அமைத்துவிட்டு மின் இணைப்புகள் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.

இதுகுறித்து சேந்தன்குடி விவசாயி தங்க கண்ணன் கூறுகையில், தட்கல் முறையில் விண்ணப்பம் கொடுக்க சென்ற போதும் ஆழ்குழாய் அமைத்துவிட்டு வந்து விண்ணப்பம் கொடுங்கள் என்றார்கள். ஆழ்குழாய் அமைத்துவிட்டு வந்தால் விண்ணப்ப காலம் முடிந்துவிட்டது என்றார்கள். சரி மீட்டர் கட்டண முறையில் மின் இணைப்பு கொடுங்கள், கருகும் மரங்களையாவது காப்பாற்றுகிறோம் என்று கேட்டால் அவற்றையும் கொடுக்கவில்லை. கேட்டால் அரசு உத்தரவு இல்லை என்கிறார்கள். இதனால் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட ஆழ்குழாய்கள் பல வருடங்களாக மூடியே கிடக்கிறது. இதனால் ஆழ்குழாய் அமைக்க வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறோம். எனவே காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக மீட்டர் கட்டண மின் இணைப்புகள் வழங்க வேண்டும். அல்லது சோலார் முறையில் மின் மோட்டார்கள் இயக்க அரசு உதவி செய்ய வேண்டும் என்று கூறினார். 

Next Story