கோடை காலத்தில் கால்நடைகளுக்கு தீவனங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை அமைச்சர் பேட்டி


கோடை காலத்தில் கால்நடைகளுக்கு தீவனங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 3 March 2019 4:00 AM IST (Updated: 3 March 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

கோடை காலத்தில் கால்நடைகளுக்கு தீவனங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி.

அன்னவாசல்,

இலுப்பூரில் பொதுமக்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், அசில் இன நாட்டுக்கோழிக்குஞ்சுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு 2,600 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகளை வழங்கினர். இதைதொடர்ந்து நிருபர்களுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 2018-19-ம் நிதியாண்டில் ஒன்றரை லட்சம் பயனாளிகளுக்கு ரூ.200 கோடி மதிப்பில் வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளது. 12 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.5 கோடி மதிப்பில் கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளது. 77 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.50 கோடி மதிப்பில் 37.5 லட்சம் அசில் இன நாட்டுக்கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் மேம்பட உள்ளது. சேலத்தில் முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் கால்நடை பூங்கா அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. கோடை காலத்தில் கால்நடைகளுக்கு தீவனங்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே கால்நடை பராமரிப்புத்துறை நிலங்களில் தீவன பயிர் வளர்க்கப்பட்டுள்ளது. கோடை காலங்களில் தீவனம் தட்டுப்பாடு ஏற்படும் மாவட்டங்களில் உடனடியாக தீவனங்கள் வழங்க கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கோமாரி நோய் கட்டுக்குள் உள்ளது என்று கூறினார். 

Next Story