தி.மு.க. எவ்வளவு பெரிய கூட்டணி அமைத்தாலும் எங்களை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


தி.மு.க. எவ்வளவு பெரிய கூட்டணி அமைத்தாலும் எங்களை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 3 March 2019 4:30 AM IST (Updated: 3 March 2019 2:05 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. எவ்வளவு பெரிய கூட்டணி அமைத்தாலும், எங்களை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மதுரை,

மதுரை மாநகர, மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா முன்னிலை வகித்தார். துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் அரசியலில் ஒரு முடிவை எடுக்கும் முன்பாக மதுரையில் அது எப்படி எதிரொலிக்கும் என ஆராய்வார்கள். தமிழகத்தில் 28 ஆண்டு காலமாக தொடர்ந்து கட்சியை நன்றாகவும், பலமுறை ஆட்சியை நன்றாகவும் நடத்தும் ஒரே இயக்கம் அ.தி.மு.க.வாகும். தினகரன் இந்த ஆட்சியை ஒரு வாரத்தில், ஒரு மாதத்தில் கலைத்து விடுவேன் என சொல்லி 2 ஆண்டுகள் ஆகி விட்டது, ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற தினகரன் உச்சநீதிமன்றம் வரை சென்று பார்த்தார் முடியவில்லை. இரட்டை இலை சின்னம் தொண்டர்கள் அதிகமாக உள்ள நமக்கு தான் என தீர்ப்பு கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பு எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவால் வழங்கப்பட்டது. வருகிற 5–ந் தேதி 60 லட்சம் ஏழை மக்களுக்கு 2000 ரூபாய் கொடுக்கும் திட்டத்தை முதல்–அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.

இவ்வாறு திட்டங்களை அறிவிக்க, அறிவிக்க ஸ்டாலினுக்கும், தினகரனுக்கும் வயிற்றில் புளியை கரைக்கிறது. ஜெயலலிதாவால் ஆரம்பிக்கப்பட்ட தொட்டில் குழந்தை திட்டத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் டாக்டர்களாக, வழக்கறிஞர்களாக உருவாகி உள்ளனர். தாலிக்கு தங்கம், விலையில்லா மிக்சி, கிரைண்டர், இருசக்கர வாகனம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு மகளிர் நல திட்டங்களால் ஆணுக்கு பெண் சமம் என்பதை கொண்டு வந்தவர் ஜெயலலிதா. அ.தி.மு.க.வை வீழ்த்த நினைத்தவர்கள் தான் வீழ்ந்து போவார்கள் என்பது தான் வரலாறு.

காவிரி தீர்ப்பு, முல்லை பெரியாறு தீர்ப்பு போன்றவை ஜெயலலிதாவால் பெறப்பட்டது. ஆனால் அந்த பிரச்சினைகள் பரபரப்பாக இருக்கும் போது, மத்தியில் ஆட்சியில் இருந்த தி.மு.க.– காங்கிரஸ் கூட்டணியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்கள் தான் தற்போது மீண்டும் தேர்தல் கூட்டணி வைத்து உள்ளார்கள். ஆனால் அவர்கள் எவ்வளவு பெரிய கூட்டணி அமைத்தாலும் எங்களை ஆட்டவோ அசைக்கவோ முடியாது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் நடக்கும்போது இந்தியா ஒரு எச்சரிக்கை விடுத்து இருந்தால் இலங்கை தமிழர்கள் படுகொலை நிகழ்ந்து இருக்காது. 2014–ல் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தன்னந்தனியாக நின்று 39 தொகுதிகளில் வெற்றி பெற்று இந்தியாவிலே மூன்றாவது பெரிய கட்சி என சாதனை படைக்க வைத்தவர் ஜெயலலிதா.

தற்போது, இலை, பூ, கனி என கூட்டணி சேர்ந்து உள்ளது. இன்னும் பல கட்சிகள் வர உள்ளன. வருகிற 6–ந் தேதி அனைத்து கூட்டணி கட்சிகளும் சேர்ந்து சென்னையில் பெரிய கூட்டம் நடத்த உள்ளோம் அந்த கூட்டத்தில் நல்ல பல அறிவிப்புகள் வெளிவரும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story