உப்பிலியபுரம் அருகே மின்னல் தாக்கிய இடத்தில் பெருக்கெடுத்த தண்ணீரால் பொதுமக்கள் வியப்பு


உப்பிலியபுரம் அருகே மின்னல் தாக்கிய இடத்தில் பெருக்கெடுத்த தண்ணீரால் பொதுமக்கள் வியப்பு
x
தினத்தந்தி 2 March 2019 11:00 PM GMT (Updated: 2 March 2019 8:49 PM GMT)

திருச்சி அருகே மின்னல் தாக்கிய இடத்தில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்ததால் பொதுமக்கள் வியப்படைந்தனர்.

துறையூர்,

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகே சூக்கலாம்பட்டி கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளாக சரியாக மழை பெய்யாததால் அந்தப் பகுதியில் வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அந்த கிராமத்தில் மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. அப்போது கொல்லிமலை அடிவாரத்தில் சூக்கலாம்பட்டி வன காப்புக்காட்டில் மின்னல் தாக்கியது. மின்னல் தாக்கியதில் காட்டில் உள்ள ஒரு இடத்தில் இருந்து தண்ணீர் பீறிட்டு வெளியேறியது. நேரம் செல்லச் செல்ல, தண்ணீரின் அளவு அதிகரித்து சூக்கலாம்பட்டி கிராமத்தில் உள்ள ஏரிக்கு பெருக்கெடுத்து வர தொடங்கியது.

இதனை கண்டு கிராம மக்கள் வியப்படைந்தனர். இந்த தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தபோது, மின்னல் தாக்கிய இடத்தில் இருந்து பெருக்கெடுத்து ஓடி வருவதை கண்டனர். இதனைகண்டு, கிராம மக்கள் குறிப்பாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மின்னல் தாக்கிய இடத்தில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய தகவல் அறிந்ததும் பக்கத்து கிராமங்களை சேர்ந்த மக்களும் சம்பவ இடத்துக்கு வந்து ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற வண்ணம் உள்ளனர். 

Next Story