தூத்துக்குடியில் துணிகரம்: சைக்கிளில் சென்ற முதியவரை தாக்கி ரூ.1½ லட்சம் பறிப்பு - போலீசார் விசாரணை


தூத்துக்குடியில் துணிகரம்: சைக்கிளில் சென்ற முதியவரை தாக்கி ரூ.1½ லட்சம் பறிப்பு - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 3 March 2019 3:00 AM IST (Updated: 3 March 2019 2:41 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் சைக்கிளில் சென்ற முதியவரை தாக்கி ரூ.1½ லட்சத்தை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அண்ணாநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 73). இவர் தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு கடையில் கணக்கராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் நேற்று வியாபாரிகளிடம் இருந்து வசூல் செய்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்து கொண்டு தனது சைக்கிளில் மார்க்கெட்டுக்கு சென்றார். பணப்பையை அந்த சைக்கிள் முன்பு உள்ள கூடையில் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி டூவிபுரம் 2-வது தெருவில் அவர் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்.

அவர்கள் முத்துசாமியை தாக்கி அவர் சைக்கிள் கூடையில் இருந்த பணத்தை எடுத்து கொண்டு தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து முத்துசாமி தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story