மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் 125 பேர் இணைந்தனர் மாதம் ரூ.3 ஆயிரம் கிடைக்கும்
மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தில் நீலகிரியில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் 125 பேர் இணைந்து உள்ளனர். அவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும்.
ஊட்டி,
சாலையோர வியாபாரிகள், ரிக்ஷா தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், விவசாய தொழிலாளர்கள், நெசவாளர்கள் மற்றும் பல்வேறு பணிகளில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் மூலம் மருத்துவ உதவி, பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மூலம் ஆயுள் காப்பீடும், பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு காப்பீடும் வழங்கி வருகிறது.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் மூலம் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 15-ந் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு, அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க மத்திய அரசு மூலம் நலத்திட்டத்தை உருவாக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாத வருமானம் ரூ.15 ஆயிரம் வரை பெறும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் இத்திட்டத்தின் கீழ் தன்னிச்சையாக இணைந்து, தொடர்ச்சியாக சந்தா செலுத்துவதன் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது.
சுமை தூக்கும் தொழிலாளர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள், செருப்பு தைக்கும் தொழிலாளர்கள், சலவை தொழிலாளர்கள், பீடி தொழிலாளர்கள் மற்றும் பிற அமைப்பு சாரா தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அமைப்பு சாரா தொழிலாளர்களாக வரையறுக்கப்பட்டு உள்ளனர். 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைத்து தொழிலாளர்களும் இத்திட்டத்தில் இணையலாம். தொழிலாளர்கள் ஒரு சிறு தொகையை மாதாந்திர சந்தாவாக தங்களது பணிக்காலத்தில் செலுத்துவதன் மூலம் 60 வயதை கடந்த பிறகு அவர்களுக்கு மாதந்தோறும் நிலையான ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்திற்காக தொழிலாளர்கள் செலுத்தும் சந்தாவிற்கு இணையான தொகையை மத்திய அரசு தனது பங்காக மாதந்தோறும் தொழிலாளர்களின் ஓய்வூதிய கணக்கில் செலுத்தும். முறையாக சந்தா செலுத்தும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் 60 வயதுக்கு முன்பாக இறக்க நேரிட்டால், அவரது கணவர் அல்லது மனைவி இந்த திட்டத்தில் இணைந்து தொடர்ந்து சந்தா செலுத்த இயலும். இத்திட்டத்தில் இணைய விருப்பம் உள்ளவர்கள் ஆதார் மற்றும் வங்கி கணக்கு எண்ணுடன் இ-சேவை மையங்களை அணுகலாம்.
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 125 பேர் இணைந்து உள்ளனர். நீலகிரியில் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அதிகாரி ராஜீவ்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த தகவலை தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் ஊட்டி அமலாக்க அதிகாரி சீனிவாசன் தெரிவித்து உள்ளார். இத்திட்டத்தை சிறப்பாக அமல்படுத்துவது குறித்து நீலகிரியில் செயல்படும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நீலகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story