கூட்டுப்பண்ணைய திட்டத்தின் கீழ் 8 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு எந்திரங்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்


கூட்டுப்பண்ணைய திட்டத்தின் கீழ் 8 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு எந்திரங்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
x
தினத்தந்தி 3 March 2019 4:15 AM IST (Updated: 3 March 2019 3:08 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுப்பண்ணையத்திட்டத்தின் கீழ் 8 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு 17 பண்ணை எந்திரங்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேளாண்மை துறையின் மூலம் கூட்டுப்பண்ணையத்திட்டத்தின் கீழ் பண்ணை எந்திரங்கள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். நெல்லை-தூத்துக்குடி ஆவின் தலைவர் என்.சின்னத்துரை முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார். அவர் 8 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.21 லட்சம் மதிப்பில் 17 விவசாய எந்திரங்களை வழங்கினார்.

அப்போது, அவர் பேசியதாவது:-

தமிழக அரசு விவசாயிகளின் நலன்கருதி பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் 2017-18-ம் ஆண்டில் இருந்து கூட்டுப்பண்ணையத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 20 விவசாயிகள் கொண்ட உழவர் ஆர்வலர் குழு அமைக்கப்பட்டு, பின்பு 5 உழவர் ஆர்வலர் குழுக்கள் இணைக்கப்பட்டு உழவர் உற்பத்தியாளர் குழுவாக மேம்படுத்தப்படுகிறது.

ஒரு உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு பண்ணை எந்திரங்கள் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் தொகுப்பு நிதி வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2017-18-ம் ஆண்டில் வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையின் மூலம் 44 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.2.20 கோடி மதிப்பிலான பண்ணை எந்திரங்கள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 2018-19-ம் ஆண்டில் வேளாண்மைத்துறையின் கீழ் தூத்துக்குடி, சாத்தான்குளம், திருச்செந்தூர், உடன்குடி, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி ஆகிய வட்டாரங்களில் 165 உழவர் ஆர்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டு, 33 உழவர் உற்பத்தியாளர் குழுக்களாக மேம்படுத்தப்பட்டது. ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கும் தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.1.65 கோடி தொகுப்பு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் சுமார் 3 ஆயிரத்து 300 சிறு, குறு விவசாயிகள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் இணை இயக்குனர் (வேளாண்மைத்துறை) மகாதேவன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன், அத்திமரப்பட்டி விவசாயிகள் சங்க தலைவர் அழகுராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூகநலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் விழா நடந்தது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, 732 ஏழை பெண்களுக்கு ரூ.4.20 கோடி மதிப்பீட்டில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவிகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) முத்துலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி கட்டிடத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்.


Next Story