அரசியலில் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் நிகழும் : நடிகை சுமலதா அம்பரீஷ் கருத்தால் பரபரப்பு
மக்களின் கருத்தை அறிய மண்டியாவில் சுற்றுப்பயணம் செய்து வருவதாகவும், அரசியலில் மாற்றங்கள் எப்போது வேண்டுமானாலும் நிகழும் என்றும் நடிகை சுமலதா அம்பரீஷ் தெரிவித்துள்ளார். இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மைசூரு,
மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவியும், நடிகையுமான சுமலதா அம்பரீஷ் மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். அதாவது தனது கணவர் அங்கம்வகித்த காங்கிரஸ் கட்சி சார்பில் மண்டியாவில் போட்டியிட அவர் அக்கட்சி தலைவர்களிடம் கூறியுள்ளார். ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ள ஜனதாதளம் (எஸ்) கட்சி மண்டியா தொகுதியை தங்களது கட்சிக்கு கேட்டு வருகிறது.
இதனால் காங்கிரஸ் சார்பில் நடிகை சுமலதா அம்பரீசுக்கு டிக்கெட் கொடுக்க முடியாத நிலை நிலவுகிறது. இதன் காரணமாக நடிகை சுமலதா அம்பரீஷ், தான் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் டிக்கெட் கிடைக்காதபட்சத்தில் சுயேச்சையாக போட்டியிடுவேன் என்று அறிவித்துள்ளார். ஆனால் மண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நடிகை சுமலதா அம்பரீஷ் களமிறக்குவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அவரை பா.ஜனதா சார்பில் மண்டியா தொகுதியில் போட்டியிட வைக்க அக்கட்சி தலைவர்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகை சுமலதா அம்பரீஷ் நேற்று மைசூரு அருகே சாமுண்டிமலை அடிவாரத்தில் உள்ள சுத்தூர் மடத்திற்கு வந்தார். பின்னர் அவர் சுத்தூர் மடாதிபதி சிவராத்திரி தேஷிகேந்திர சுவாமியை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் இருவரும் அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தாக சொல்லப்படுகிறது. இந்த பேச்சு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.
அதன் பிறகு மடத்தில் இருந்து வெளியே வந்த நடிகை சுமலதா அம்பரீஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
எனது கணவரின் சொந்த ஊரான மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். அதற்காக காங்கிரஸ் கட்சியில் டிக்கெட் கேட்டுள்ளேன். காங்கிரஸ் சார்பில் எனக்கு டிக்கெட் கிடைக்காவிட்டால், எந்த கட்சி சார்பில் போட்டியிடுவது என இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
மண்டியா மாவட்ட மக்களின் விருப்பத்தை அறிய நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். இன்றும் (அதாவது நேற்று) கே.ஆர்.நகர் தாலுகாவில் சுற்றுப்பயணம் செய்து மக்களிடம் கருத்து கேட்க உள்ளேன். அரசியலில் மாற்றங்கள், திருப்பங்கள் எப்போது வேண்டுமானாலும் நிகழும். அது உங்களுக்கே தெரியும். இப்போது நான் எதையும் கூறமாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது திரைப்பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், நடிகர் தொட்டண்ணா ஆகியோர் உடன் இருந்தனர்.
அரசியலில் மாற்றங்கள் எப்போது வேண்டுமானாலும் நிகழும் என நடிகை சுமலதா அம்பரீஷ் கூறியிருப்பது, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் டிக்கெட் கிடைக்காத பட்சத்தில் அவர் பா.ஜனதா சார்பில் களமிறங்கவே என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். நடிகை சுமலதா அம்பரீசின் இந்த கருத்து கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story