மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கான எழுத்து தேர்வு: கலெக்டர் ரோகிணி நேரில் ஆய்வு


மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கான எழுத்து தேர்வு: கலெக்டர் ரோகிணி நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 3 March 2019 4:15 AM IST (Updated: 3 March 2019 4:39 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கான எழுத்து தேர்வினை கலெக்டர் ரோகிணி நேரில் ஆய்வு செய்தார்.

சேலம், 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் மாவட்ட கல்வி அலுவலர், தொழிற்பயிற்சி நிறுவன முதல்வர் மற்றும் தொழிற்சாலை உதவி பொறியாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு நேற்று நடத்தப்பட்டது. சேலம் மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிறுவன முதல்வர் மற்றும் தொழிற்சாலை உதவி பொறியாளர் பதவி தேர்வுக்காக 2 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தேர்வுக்கு 1,201 தேர்வர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால் 651 பேர் மட்டுமே கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

இதேபோல், மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் 11 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மையங்களில் மொத்தம் 5 ஆயிரத்து 806 பேர் தேர்வு எழுத ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தனர். ஆனால் 4 ஆயிரத்து 38 பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள்.

சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் சேலம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடந்த தேர்வுகளை மாவட்ட கலெக்டர் ரோகிணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அவர் தேர்வில் எவ்வித முறைகேடு இல்லாமல் நடத்த வேண்டும் என்று தேர்வு மைய கண்காணிப்பாளர்களை கேட்டுக்கொண்டார். இந்த தேர்வினை வீடியோ கேமரா மூலம் பதிவு செய்து கண்காணிக்கப்பட்டது. மேலும், கண்காணிப்பு பணியில் வருவாய்த்துறை அலுவலர்களும், பறக்கும் படை அலுவலர்கள் உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெறுவதை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.

மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர், தொழிற்பயிற்சி நிறுவன முதல்வர் மற்றும் தொழிற்சாலை உதவி பொறியாளர் பதவிக்கான எழுத்து தேர்வினை சிறப்பாக நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

ஆய்வின்போது உதவி கலெக்டர் (பயிற்சி) வந்தனா கார்க் உடனிருந்தார்.

Next Story