கணவருக்காக ராணுவ சேவை
ராணுவத்தில் சேர்ந்து உயிர் நீத்த கணவரின் ஆன்மாவுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக தன்னையும் ராணுவத்தில் இணைத்து கொண்டிருக்கிறார், கவுரி மகாதிக். இவருடைய கணவர் பிரகாஷ் கணேஷ் மகாதிக், இந்தியா - சீனா எல்லைப்பகுதியில் இந்திய ராணுவத்தில் பணி புரிந்தவர். கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ந்தேதி நடந்த தீ விபத்தில் சிக்கி பிரகாஷ் கணேஷ் உயிரிழந்தார்.
கணவரை இழந்த துயரம் கவுரியை வெகுவாக பாதித்தது. படிப்படியாக இயல்புநிலைக்கு திரும்பியவர், கணவர் செய்த ராணுவ சேவையை தானும் தொடருவதென்று தீர்மானித்தார். ராணுவத்தில் சேருவதற்காக நடத்தப்படும் தேர்வில் விதவைகள் பிரிவில் விண்ணப்பித்து தேர்வு எழுதினார். இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டார். அதைத்தொடர்ந்து வருகிற ஏப்ரல் மாதம் முதல் 49 வாரங்கள் பயிற்சி பெற இருக்கிறார். அவருக்கான பயிற்சி சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி அகாடமியில் நடக்கிறது. அங்கு பயிற்சியை முடித்ததும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ராணுவத்தில் சேர்ந்து சேவையாற்ற இருக்கிறார்.
ராணுவ பயிற்சிக்காக நடத்தப்பட்ட தேர்வில் கவுரி முதல் நபராக தேர்ச்சி பெற்றுள்ளார். ‘‘ராணுவத்தில் சேர்ந்து உயிரிழந்த வீரர்களின் மனைவிகளுக்கான தேர்வு பெங்களூரு, போபால், அலகாபாத் ஆகிய மூன்று இடங்களில் நடந்தது. போபாலில் உள்ள தேர்வு மையத்தில் நான் தேர்வு எழுதினேன். இதில் 16 பேர் தேர்ச்சி பெற்றோம். அப்போது எனக்கு கொடுக்கப்பட்ட எண்ணும், என் கணவருக்கு கொடுக்கப்பட்ட எண்ணும் ஒன்றாகவே இருந்தது’’ என்று மனம் நெகிழ்கிறார்.
கவுரி வக்கீலுக்கு படித்தவர். ஒரு நிறுவனத்தில் இணைந்து பணியாற்றிக்கொண்டிருந்தார். 2015-ம் ஆண்டு பிரகாஷை திருமணம் செய்தார். கணவர் இறந்த பிறகு வேலையை கைவிட்டவர் ராணுவத்தில் சேர்வதற்கான முயற்சியில் ஈடுபட தொடங்கி வெற்றியும் பெற்றிருக்கிறார். தற்போது மும்பை விகார் பகுதியில் மாமியாருடன் வசித்து வருகிறார். கணவரை அடுத்து ராணுவத்தில் தானும் சேர்வது மரபு வழியாக தொடர்வதாகவும், மேஜர் பிரகாஷ் கணேஷ் மகாதிக்கின் மனைவி என்று சொல்லிக்கொள்வது தனக்கு பெருமிதம் தருவதாகவும் கூறுகிறார்.
Related Tags :
Next Story