26 மையங்களில் நடந்த குரூப்-1 தேர்வை 5 , 568 பேர் எழுதினர் தேர்வு மையங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்


26 மையங்களில் நடந்த குரூப்-1 தேர்வை 5 , 568 பேர் எழுதினர் தேர்வு மையங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்
x
தினத்தந்தி 4 March 2019 4:30 AM IST (Updated: 3 March 2019 11:02 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் 26 மையங்களில் நடந்த குரூப்-1 தேர்வை 5 ஆயிரத்து 568 பேர் எழுதினர். தேர்வு மையங்களை கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார்.

வேலூர்,

தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் உதவி கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, உதவி கமிஷனர், கூட்டுறவு துணை பதிவாளர், மாவட்ட பதிவாளர், ஊராட்சிகள் உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் என மொத்தம் 139 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 முதல்நிலை தேர்விற்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. இத்தேர்வுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.

வேலூர் மாவட்டத்தில் இத்தேர்வை எழுத 7 ஆயிரத்து 690 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு வேலூர் வெங்கடேஸ்வரா அரசு மேல்நிலைப்பள்ளி, தந்தை பெரியார் பொறியியல் கல்லூரி, அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, ஈ.வெ.ரா. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தோட்டப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி, வேலூர் தொன்போஸ்கோ பள்ளி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 26 மையங்களில் தேர்வு நடந்தது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது.

காலை 8 மணி முதல் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். பலத்த சோதனைக்கு பின்னர் 9.30 மணிக்கு தேர்வர்கள் தேர்வு அறைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதே போன்று 10.30 மணி வரை வந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மதியம் 1 மணி வரை தேர்வு நடந்தது.

விண்ணப்பித்தவர்களில் 5 ஆயிரத்து 568 பேர் தேர்வு எழுதினர். 2 ஆயிரத்து 122 பேர் தேர்வு எழுத வரவில்லை. 20 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தேர்வை கண்காணிக்க 26 முதன்மை கண்காணிப்பாளர்கள், தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும் 3 பறக்கும் படைகள், 6 மொபைல் யூனிட், 26 ஆய்வு அலுவலர்கள் தேர்வு மையங்களில் ஆய்வு செய்து தேர்வில் முறைகேடு எதுவும் நடக்கிறதா? என்பது குறித்தும் கண்காணித்தனர்.

வேலூர் தொன்போஸ்கோ பள்ளி உள்ளிட்ட தேர்வு மையங்களில் நடந்த தேர்வை கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்வு மையங்கள் மற்றும் தேர்வு நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. தேர்வு மையத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story