கச்சிராயப்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல் - தீயணைப்பு நிலைய அதிகாரி பலி
கச்சிராயப்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் தீயணைப்பு நிலைய அதிகாரி பலியானார்.
கச்சிராயப்பாளையம்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள தெற்கு வெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன்(வயது 58). மங்கலம்பேட்டையில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் தனது நண்பரான விருத்தாசலம் அருகே உள்ள மேல்பாப்பனப்பட்டு பகுதியை சேர்ந்த மதன்(40) என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் கச்சிராயப்பாளையம் அருகே கல்வராயன்மலையில் உள்ள ஈச்சங்காடு கிராமத்துக்கு சொந்தவேலை காரணமாக சென்றார். பின்னர் அங்கு வேலையை முடித்துவிட்டு, இருவரும் அதே மோட்டார் சைக்கிளில் கள்ளக்குறிச்சி நோக்கி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை மதன் ஓட்டினார்.
கச்சிராயப்பாளையம் அடுத்த வெள்ளிமலை வனத்துறை குடில் அருகே வந்து கொண்டிருந்தபோது, வெள்ளிமலையில் இருந்து கருமந்துறை நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக மதன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஜெயராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மதனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த கரியாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான ஜெயராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story