ராஜீவ் கொலைகைதிகளை விடுவிக்க வலியுறுத்தி 7 ஊர்களில் 9-ந் தேதி மனிதசங்கிலி அற்புதம்மாள் பேட்டி
ராஜீவ் கொலைகைதிகளை விடுவிக்க வலியுறுத்தி வருகிற 9-ந் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் 7 ஊர்களில் மனிதசங்கிலி நடத்தப்பட உள்ளதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறினார்.
போளூர்,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயிலில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி 7 பேர் விடுதலைக்கான கூட்டமைப்பு சார்பில் வருகிற 9-ந் தேதி (சனிக்கிழமை) மனிதசங்கிலி நடக்கிறது.
இது குறித்த விளக்கக்கூட்டம் போளூரில் நடந்தது. கூட்டத்திற்கு கூட்டமைப்பு பொறுப்பாளர் தமிழன்பாபு தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், நிருபர்களிடம் கூறியதாவது:-
7 பேரின் விடுதலைக்காக 28 வருடங்களாகக் காத்திருக்கிறோம். இந்த வழக்கில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. 26 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அதில் 7 பேர் தவிர மற்றவர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.
28 ஆண்டுகள் கடந்த பிறகும் கூட வழக்கு சட்டத்திற்கு அடங்காமல் போகிறது. என்னுடைய மகன் தண்டனையைப் பூரணமாக ஏற்றுக் கொண்டு முழுமையாக அனுபவித்தும் விட்டான். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி தமிழக அரசும் அமைச்சரவையைக் கூட்டி 161-வது பிரிவின்கீழ் விடுதலைக்கான தீர்மானத்தை நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது.
ஆனால் 6 மாத காலமாகியும் எந்தவிதப் பதிலும் கிடைக்காததால் 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி வருகிற 9-ந் தேதி சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, புதுச்சேரி ஆகிய 7 நகரங்களில் அமைதியான வழியில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவது எனத் தீர்மானித்துள்ளோம். இதில் அரசியல் தலைவர்கள், சமுதாய தலைவர்கள், மாணவர்கள், திரைத் துறையைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொள்ள உள்ளனர். எனக்குப்போராட்டங்களில் ஆர்வம் இல்லை. அமைதியான வழியில் இவர்களின் விடுதலைக்கு அனைவரின் ஆதரவு இருக்கிறது என்று காண்பிப்பதற்காக மனித சங்கிலி நடைபெறுகிறது. இது குறித்த விளக்கக் கூட்டங்களை 22 ஊர்களில் முடித்துள்ளேன். தற்போது 23-வது ஊராக போளூரில் இக்கூட்டம் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story