தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 38 மையங்களில் குரூப்-1 தேர்வு 8,611 பேர் எழுதினர்


தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 38 மையங்களில் குரூப்-1 தேர்வு 8,611 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 4 March 2019 4:30 AM IST (Updated: 4 March 2019 12:27 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 38 மையங்களில் குரூப்-1 தேர்வை 8,611 பேர் எழுதினர்.

தர்மபுரி, 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு பதவிகளுக்கு நடத்தப்படும் குரூப்-1 தேர்வுகள் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை எழுத தர்மபுரி மாவட்டத்தில் 7,076 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த தேர்வுக்காக மொத்தம் 22 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வு மையங்களில் நேற்று 5,481 பேர் ஆர்வத்துடன் எழுதினர். 1,595 பேர் தேர்வு எழுத வரவில்லை.

குரூப்-1 தேர்வு நடைபெற்ற மையங்களில் செல்போன், கால்குலேட்டர், எலக்ட்ரானிக் கைகெடிகாரம் ஆகிய உபகரணங்களை எடுத்து வர அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மையத்திற்கு வந்த தேர்வாளர்கள் அனைவரும் முழு பரிசோதனைக்கு பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க ஒவ்வொரு தேர்வு மையத்திலும் வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது. தேர்வுகள் நடைபெற்ற போது அனைத்து நடவடிக்கைகளும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவோர் எந்தவிதமான முறைகேடுகளில் ஈடுபடுவதையும் தவிர்க்க பறக்கும் படை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த பறக்கும்படை குழுவினர் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொண்டனர். தேர்வாளர்களின் வசதிக்காக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தது.

கிருஷ்ணகிரியில் 16 தேர்வு மையங்களில் நடைபெறும் இந்த தேர்வினை எழுத 4,343 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த இந்த தேர்வினை தேர்விற்கு விண்ணப்பித்திருந்த 4,343 பேரில், 3,130 பேர் மட்டும் தேர்வு எழுதினர். 1,213 பேர் தேர்வினை எழுத வரவில்லை. இதற்கான தேர்வு நடைபெறும் மையங்களில் போலீஸ் பாதுகாப்பு, மின்வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் தேர்வர்கள் வந்து செல்ல சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தன.

அத்துடன் இந்த தேர்வை கண்காணிக்க 2 சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது. தேர்வர்கள் தேர்வுக்கூடங்களுக்குள் செல்போன் மற்றும் மின்னணு சாதனங்கள் எடுத்து செல்ல தடை செய்யப்பட்டிருந்தது.

Next Story