திருத்தணியில் சிலிண்டர் வெடித்து 3 குடிசைகள் எரிந்து சாம்பல்


திருத்தணியில் சிலிண்டர் வெடித்து 3 குடிசைகள் எரிந்து சாம்பல்
x
தினத்தந்தி 3 March 2019 10:00 PM GMT (Updated: 3 March 2019 6:59 PM GMT)

திருத்தணியில் சிலிண்டர் வெடித்து 3 குடிசைகள் எரிந்து சாம்பலாகின.

திருத்தணி,

திருத்தணி அக்கய்யநாயுடு சாலை தணிகாசலம்மன் கோவில் பின்புறம் உள்ள பகுதியை சேர்ந்தவர் சத்யா (வயது 40). அங்குள்ள குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் அவரது சகோதரிகள் இந்திரா (38) மற்றும் விஜயலட்சுமி (35) ஆகியோர் தனித்தனியாக குடிசைகளில் வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சத்யா வீட்டில் நேற்று முன்தினம் திடீரென சிலிண்டர் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ அருகில் உள்ள இந்திரா மற்றும் விஜயலட்சுமி ஆகியோரின் வீட்டிலும் பரவியது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் 3 குடிசைகளும் எரிந்து சாம்பலாகின.

தீ விபத்து நடந்தபோது யாரும் வீட்டில் இல்லாததால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்தால் வீடுகளில் இருந்த 20 பவுன் தங்கநகைகள் மற்றும் பொருட்கள் நாசமானதாக கூறப்படுகிறது.

தீ விபத்து குறித்து திருத்தணி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். திருத்தணி எம்.எல்.ஏ. பி.எம்.நரசிம்மன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது திருத்தணி நகராட்சி முன்னாள் தலைவர் சவுந்தர்ராஜன், நகர அவைத்தலைவர் குப்புசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story