பெரியாரின் கொள்கைகளை இந்தியா முழுவதும் ஏற்கும் சூழல் உருவாகி வருகிறது தர்மபுரியில் திராவிடர் கழக துணைத்தலைவர் பேச்சு


பெரியாரின் கொள்கைகளை இந்தியா முழுவதும் ஏற்கும் சூழல் உருவாகி வருகிறது தர்மபுரியில் திராவிடர் கழக துணைத்தலைவர் பேச்சு
x
தினத்தந்தி 4 March 2019 3:45 AM IST (Updated: 4 March 2019 12:42 AM IST)
t-max-icont-min-icon

பெரியாரின் கொள்கைகளை இந்தியா முழுவதும் ஏற்கும் சூழல் உருவாகி வருகிறது என்று தர்மபுரியில் நடந்த கூட்டத்தில் திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் பேசினார்.

தர்மபுரி,

திராவிடர் கழகத்தின் தர்மபுரி மண்டல நிர்வாகிகள் கூட்டம் தர்மபுரி பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மண்டல தலைவர் சிவாஜி தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் திராவிட மணி, மாவட்ட தலைவர் இளையமாதன், மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பாளர் குணசேகரன், தலைமைக்கழக பேச்சாளர் பெரியார் செல்வன், மாநில அமைப்பு செயலாளர் ஜெயராமன், மகளிரணி மாநில அமைப்பாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்கள்.

கூட்டத்தில் திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் கலந்து கொண்டு பேசியதாவது:-

சாதி மறுப்பு, பெண்ணடிமைத்தன ஒழிப்பு ஆகியவற்றிற்காக போராடிய பெரியார், ஒவ்வொரு சிறிய விஷயத்தில்கூட அலட்சியம் காட்டக்கூடாது என்பதை கொள்கையாக கொண்டு வாழ்ந்தவர். பெரியாரின் சமத்துவம், சமூகநீதி தத்துவம் இந்தியாவிற்கே வழிகாட்டும் சிறப்புமிக்கது. பெரியாரின் கொள்கைகளை இந்தியா முழுவதும் ஏற்றுக்கொள்ளும் சூழல் உருவாகி வருகிறது. இது காலத்தின் கட்டாயம்.

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை திராவிடர் கழகத்தின் போராட்டம் பெற்றுத்தந்தது. அதன் பயன் இன்னும் முழுமையாக மக்களை சென்றடையவில்லை. அந்த இலக்கை நோக்கி நாம் தொடர்ந்து போராட வேண்டும். பெரியாரின் கொள்கைகள் மக்களை சென்றடைய உறுதுணையாக செயல்பட்ட மணியம்மையார் பணிவும், துணிவும் கொண்டவர். இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபட்டவர். மணியம்மையாரின் நூற்றாண்டு விழாவை நாம் சிறப்பாக கொண்டாடி அவருக்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களை சேர்ந்த திராவிடர் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story