சாலையின் குறுக்கே உள்ள தடுப்பு கம்பிகளை அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


சாலையின் குறுக்கே உள்ள தடுப்பு கம்பிகளை அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 4 March 2019 4:00 AM IST (Updated: 4 March 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

சிங்கப்பெருமாள் கோவிலில் சாலையின் குறுக்கே வைக்கப்பட்டுள்ள தடுப்புகம்பிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும். இங்கிருந்து 1 கி.மீ. தொலைவில் மகேந்திரா வேல்டு சிட்டி அமைந்துள்ளது. அங்கு நூற்றுக் கணக்கான பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளன. இதேபோல தெற்கு திசையில் சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ள ஒரகடம் சிப்காட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கம்பெனிகள் உள்ளன.

இந்த இடங்களில் பணிபுரியும் வேலை ஆட்களின் எண்ணிக்கை மட்டுமே சுமார் 2 லட்சத்தை தாண்டும். இதுபோல சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.

மேலும் இங்கு புகழ்பெற்ற நரசிம்மபெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இதன்காரணமாக சிங்கப்பெருமாள்கோவில் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவோடு இரவாக போக்குவரத்து போலீசார், சிங்கப்பெருமாள் கோவில் அனுமந்தபுரம் இணைப்பு சாலையின் குறுக்கே வரிசையாக இரும்பு கம்பிகளை நட்டு வைத்து விட்டனர். இதனால் ஒரு அவசரத்திற்கு செல்ல வேண்டுமானால் ஒரு கி.மீ. தூரம் சென்று தான் இந்த இடத்திற்கு வர முடியும்.

அப்படியே ஒரு கி.மீ. சுற்றி வந்தாலும் தெற்கு நோக்கி உள்ள திருத்தேரி ஜங்சன் வழியாக வரும்போது, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்களால் தினமும் விபத்து ஏற்படுகிறது. மேலும் கடும்போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதேபோல வடக்கு திசை நோக்கி உள்ள மெல்ரோசாபுரம் கூட்ரோட்டிலும் இதேநிலை தான்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

பாரதியார் தெருவில் வசிக்கும் ஒருவர் இறந்தால் அந்த பிணத்தை எப்படி கொண்டு செல்வது? என்று போலீசாரிடம் கேட்டால், திருத்தேரி வழியாக எடுத்து செல்லுங்கள் என்று கூறுகின்றனர். 1 மீட்டர் நீள சாலையை கடந்து செல்வதை விடுத்து போக்குவரத்து நெரிசலில் பிணத்தை கொண்டு செல்லுமாறு கூறுவது என்ன நியாயம்?.

இது ஒரு புறம் என்றால் இங்குள்ள திருமண மண்டபங்களில் நடைபெறும் அனைத்து திருமண பெண் அழைப்பும் நரசிம்ம பெருமாள் கோவிலில் இருந்து தான் அழைத்து வருவார்கள். இந்த தடுப்பு கம்பிகளால் அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு செல்வோரும் சுற்றி வரும் நிலை ஏற்படுகிறது.

சாதாரணமாகவே திருமண அழைப்பின்போது சர்வீஸ் சாலையில் பட்டாசு வெடிப்பார்கள். இப்போது நடுரோட்டில் பட்டாசு வெடிப்பதால் சிரமமாக உள்ளது. எனவே வழக்கம்போல செல்ல தடுப்பு கம்பிகளை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சாலைமறியலில் ஈடுபடுவோம். இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.

Next Story