பா.ஜனதாவுடன் கூட்டணி சேர எதிர்ப்பு: த.மா.கா.வில் இருந்து 1,000 பேர் விலகி காங்கிரசில் இணைய முடிவு


பா.ஜனதாவுடன் கூட்டணி சேர எதிர்ப்பு: த.மா.கா.வில் இருந்து 1,000 பேர் விலகி காங்கிரசில் இணைய முடிவு
x
தினத்தந்தி 4 March 2019 4:30 AM IST (Updated: 4 March 2019 1:10 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதாவுடன் கூட்டணி சேர எதிர்ப்பு தெரிவித்து த.மா.கா.வில் இருந்து 1,000 பேர் விலகி காங்கிரசில் இணைய முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூரை அடுத்த மங்கலம் பகுதி த.மா.கா. பொதுக்குழு கூட்டம் நேற்று காலை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்கம் தலைமையில் மங்கலத்தில் நடைபெற்றது. வட்டார தலைவர் சபாதுரை, மங்கலம் பகுதி தலைவர் நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை தனது பிரசார யுக்தியாக பா.ஜனதா அரசு மேற்கொள்வதை கண்டிப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்கும் முடிவை த.மா.கா. மேற்கொள்வதை ஏற்காமல் முத்துராமலிங்கம் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் 1,000 பேர் த.மா.கா.வில் இருந்து விலகி காங்கிரசில் இணைவது என முடிவு செய்யப்பட்டது. மங்கலம், அக்ரகாரப்புத்தூர் பகுதிகளில் உள்ள த.மா.கா. அலுவலகத்தின் முன் உள்ள கொடிக்கம்பத்தில் த.மா.கா. கொடி இறக்கப்பட்டு, காங்கிரஸ் கொடி ஏற்பட்டது. சுற்றியுள்ள கிராமங்களிலும் காங்கிரஸ் கொடி ஏற்பட்டது.

இதுகுறித்து முத்துராமலிங்கம் கூறியதாவது:–

நாடாளுமன்ற தேர்தலில் மதவாத கட்சியான பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்கும் முடிவை த.மா.கா. எடுக்க உள்ளது. ஏற்கனவே தலைவர் ஜி.கே.வாசனிடம் இதுதொடர்பாக பேசியுள்ளேன். சமீபத்தில் அவர் என்னிடம் பேசும்போது பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக கூறினார். அப்போதே இந்த முடிவுக்கு எங்கள் பகுதியில் உள்ள எதிர்ப்பை அவரிடம் தெரிவித்தேன். தலைவர் மூப்பனார் தொடங்கிய த.மா.கா. இதுவரை கடைபிடித்து வந்த கொள்கைக்கு மாறாக பா.ஜனதா கட்சியோடு கூட்டணி வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

எங்கள் பகுதியில் 10 கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. எங்கள் பகுதி முக்கிய நிர்வாகிகளிடமும் கலந்து பேசப்பட்டது. பா.ஜனதாவோடு த.மா.கா. கூட்டணி வைக்கும் எண்ணம் தலைவருக்கு ஏற்பட்டுவிட்டது. அவர் கூட்டணி வைக்காவிட்டாலும் கூட, அந்த எண்ணம் ஏற்பட்டு விட்டதால் இனி த.மா.கா.வில் இருக்கக்கூடாது என்று அனைவரும் ஒரு மனதாக முடிவு செய்தோம். அதன்பிறகே த.மா.கா.வில் இருந்து 1,000 பேர் விலகி தாய்க்கழகமான காங்கிரசில் இணைய உள்ளோம். இதற்காக காங்கிரஸ் தலைமையிடம் பேசியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story