கொள்கைகளுக்கானது அல்ல: அ.தி.மு.க.-பா.ஜனதா கொள்ளை கூட்டணி கி.வீரமணி கடும்தாக்கு


கொள்கைகளுக்கானது அல்ல: அ.தி.மு.க.-பா.ஜனதா கொள்ளை கூட்டணி கி.வீரமணி கடும்தாக்கு
x
தினத்தந்தி 4 March 2019 4:45 AM IST (Updated: 4 March 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கொள்கைகளுக்காக அல்லாமல் அ.தி.மு.க.-பாரதீய ஜனதா கொள்ளை கூட்டணி அமைத்துள்ளதாக கி.வீரமணி கூறினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி அண்ணா திடலில் காரை சி.மு. சிவம் நூற்றாண்டு மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டிற்கு அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். சிவா எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டினை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு காரை சி.மு.சிவம் நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டார். அதனை முதல்-அமைச்சர் நாராயணசாமி பெற்றுக்கொண்டார்.

மாநாட்டில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

மக்கள் சக்திதான் மகத்தான சக்தி. தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள். ஒரு கட்சியை பற்றி ஊழல் குற்றச்சாட்டு கூறியவர்களே அந்த கட்சியுடன் கைக்கோர்த்து கூட்டணி அமைத்துக்கொள்கிறார்கள். இது சந்தர்ப்பவாத கூட்டணியாகும். மக்களுக்காக போராட வேண்டிய கடமை முதல்-அமைச்சருக்கு உண்டு. உரிமையை பெறுவதற்காகவே கவர்னர் மாளிகை முன்பு 39 கோரிக்கைகளுக்காக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம். முக்கியமான 9 கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களிடம் கூறும்போது, “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கட்டாயம் தேவை. நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் மற்றும் புதுவையில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கூட்டணி கொள்கைக்காக அமைக்கப்படாமல் கொள்ளைக்காகவே அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

முன்னதாக திராவிட கழக புதுவை மாநில தலைவர் சிவ.வீரமணி வரவேற்றார். இதில் சாதி, மத மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிகளை பாராட்டி பரிசுகளும், பெரியார் தொண்டர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன. கலைமகள் இயல் பட்டறை சார்பில் பறை நிகழ்ச்சியும், தந்தை பெரியார் தொண்டால் அதிகம் பயன்பெற்றோர் ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில, மண்டல, மாவட்ட திராவிடர் கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சி மற்றும் இயக்கங்களை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் அழகரசன் நன்றி கூறினார்.

Next Story