வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம், தமிழகத்தில் 60 லட்சம் ஏழை குடும்பங்கள் பயன்பெறும்


வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம், தமிழகத்தில் 60 லட்சம் ஏழை குடும்பங்கள் பயன்பெறும்
x
தினத்தந்தி 3 March 2019 10:15 PM GMT (Updated: 3 March 2019 8:43 PM GMT)

வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்குவதின் மூலம் தமிழகத்தில் 60 லட்சம் ஏழை குடும்பங்கள் பயன்பெறுவார்கள் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

வால்பாறை,

கோவை மாவட்டம் வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மகேந்திரன் எம்.பி., கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொள்ளாச்சி சப்-கலெக்டர் ரவிக்குமார் வரவேற்றார்.

விழாவில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு வால்பாறை பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் ரூ.5 கோடியில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்கும், சின்னக்கல்லார் நீரார் பகுதியில் ரூ.2 கோடியில் படகு இல்லம் அமைப்பதற்கும், ரூ.9 கோடியே 92 லட்சத்தில் குடிசை மாற்று வாரியம் மூலமாக ஏழை, குடும்பங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் ரூ.17 கோடியிலான வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து வால்பாறை கூட்டுறவு நகரவங்கி மூலம் தேயிலைத்தோட்ட தொழிலாளர்களுக்கு வங்கிக்கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, வங்கிக்கடனையும் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வால்பாறை பகுதி மக்கள் நினைத்து பார்க்காத திட்டம் அடுக்குமாடி குடியிருப்புத்திட்டம். இந்த திட்டம் மூலம் தற்போது இருந்த இடத்தில் 112 வீடுகள் மட்டுமே கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் 3 இடங்களை இந்த திட்டத்திற்காக தேர்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த இடம் கிடைத்தவுடன் மேலும் 1000 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தரப்படும்.

படகுத்துறை அமைக்கப்பட உள்ள இடத்திற்கு பக்கத்தில் சுற்றுலா பயணிகளுக்காகவும், வால்பாறை பகுதி மக்களுக்காகவும் சிறுவர் பூங்காவும் அமைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் எஸ்டேட் பகுதிகளில் உள்ள பழுதடைந்த சாலைகளை எஸ்டேட் நிர்வாகங்கள் நகராட்சியிடம் ஒப்படைத்தால் அந்த சாலைகள் சீரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், ரூ.1,652 கோடி மதிப்பீட்டில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த திட்டம், முழுக்க முழுக்க மாநில அரசு நிதியிலேயே செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தினால், பவானி ஆற்றின் உபரி நீரான 1.5 டி.எம்.சி. தண்ணீரினை காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்தில் உள்ள இந்த 3 மாவட்டங்களில் உள்ள 32 பொதுப்பணித்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 கசிவுநீர் குட்டைகள் பயன்பெறும். இதனால் 24 ஆயிரத்து 468 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

அதேபோல், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு குறிப்பாக விவசாய தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியுதவியாக ரூ.2 ஆயிரம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தினால், கிராமம் மற்றும் நகரங்களில் வாழும் 60 லட்சம் ஏழை குடும்பங்கள் பயன்பெறும். இந்த சிறப்பு நிதி அனைத்து தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் கிடைப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

தேயிலைத்தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வினை பொறுத்தவரையில் அனைத்து தடைகளையும் கடந்து முதல்-அமைச்சர் நேரடியாக தலையிட்டு நமது கோரிக்கையை ஏற்று ஊதிய உயர்வை பெற்று தந்துள்ளார். கோவை மாவட்டத்தின் கடைகோடி பகுதியில் வால்பாறையில் உள்ள மக்கள் தங்கள் வாழ்வில் வளம்பெறும் வகையில் எண்ணற்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக வால்பாறை கூட்டுறவு நகர வங்கித்தலைவர் வால்பாறை அமீது, வங்கி துணைத்தலைவர் மயில்கணேசன், கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைபாண்டியன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் பல்வேறுதுறை அதிகாரிகள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வால்பாறை நகராட்சி பொறியாளர் மற்றும் ஆணையாளர் (பொறுப்பு) ராஜகோபாலன் நன்றி கூறினார். 

Next Story