கோவை ஒண்டிப்புதூரில் நடந்த மூதாட்டி கொலையில் முக்கிய தடயம் சிக்கியது


கோவை ஒண்டிப்புதூரில் நடந்த மூதாட்டி கொலையில் முக்கிய தடயம் சிக்கியது
x
தினத்தந்தி 3 March 2019 10:45 PM GMT (Updated: 3 March 2019 8:43 PM GMT)

கோவை ஒண்டிப்புதூரில் நடந்த மூதாட்டி கொலையில் முக்கிய தடயம் போலீசாருக்கு கிடைத்து உள்ளது. அதை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிங்காநல்லூர்,

கோவை ஒண்டிப்புதூர் சவுடம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி கரியம்மாள் (வயது 85). இவர்களுக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ராமசாமி இறந்துவிட்டார். இதனால் கரியம்மாள் தனது இளைய மகனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் கரியம்மாள் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு புகுந்த மர்ம ஆசாமிகள் அவரை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு அவர் அணிந்து இருந்த 4½ பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்களும் விசாரணையை தொடங்கி உள்ளனர். இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

சம்பவம் நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை வைத்து பார்க்கும்போது ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டு உள்ளனர். கொலை நடந்த வீடு, தனி வீடு இல்லை. அடுத்தடுத்து வீடுகள் உள்ளன. ஒரு வீட்டிற்கு செல்லும்போது மற்ற வீட்டில் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக தெரியும். எனவே அங்கு வந்து சென்ற நபர்கள் குறித்து 100-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதில் முக்கிய தடயம் சிக்கி உள்ளது. அதை வைத்து விசாரணை நடத்தி வருகிறோம். எனவே ஓரிரு நாட்களில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம். வீட்டில் முதியவர்கள் தனியாக இருந்தால், அவர்களிடம் நகை அணிய கொடுக்க வேண்டாம். அத்துடன் அவர்களிடம் அதிகளவில் பணத்தையும் கொடுத்து அனுப்ப வேண்டாம். இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story