40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்று ‘பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக அ.ம.மு.க. திகழும்’ ஸ்ரீவில்லிபுத்தூரில் டி.டி.வி. தினகரன் பேச்சு


40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்று ‘பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக அ.ம.மு.க. திகழும்’ ஸ்ரீவில்லிபுத்தூரில் டி.டி.வி. தினகரன் பேச்சு
x
தினத்தந்தி 3 March 2019 11:30 PM GMT (Updated: 3 March 2019 8:54 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்று அடுத்த பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக அ.ம.மு.க. திகழும் என்று ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரமாண்ட கம்பத்தில் கொடியேற்றி வைத்து டி.டி.வி. தினகரன் கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில் மெயின் ரோட்டில் வத்திராயிருப்பு ஒன்றிய அ.ம.மு.க. சார்பில் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்தோஷ்குமார், விவசாய அணி செயலாளர் கிருஷ்ணசாமி, ஒன்றிய செயலாளர் அழகர்சாமி ஆகியோர் ஏற்பாட்டில் தமிழகத்திலேயே அதிக உயரம் கொண்ட 123 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. பிரமாண்ட கம்பத்தில் அ.ம.மு.க. கொடி ஏற்றும் விழா நேற்று இரவு நடைபெற்றது.

விழாவிற்கு தென் மண்டல செயலாளர் மாணிக்கராசா, மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்தோஷ்குமார் வரவேற்று பேசினார்.

விழாவில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு 123 அடி உயர கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். கல்வெட்டையும் திறந்து வைத்தார். மேலும் அவர் 2 ஆயிரம் பேருக்கு வேட்டி-சேலைகளையும் வழங்கினார். விழாவில் டி.டி.வி. தினகரனுக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்தோஷ்குமார் வீரவாள் வழங்கி கிரீடம் அணிவித்தார். கிரீடம் அணிந்த படியே அங்கு திரண்டு இருந்தோர் மத்தியில் வேனில் நின்றபடி டி.டி.வி. தினகரன் பேசியதாவது:-

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் மிகவும் உயரமானது. தமிழக அரசின் முத்திரை சின்னமாக அது உள்ளது. இந்த சிறப்புமிக்க ஸ்ரீவில்லிபுத்தூரிலேயே 123 அடி உயர கம்பத்தில் கொடி பறக்க விட்டிருப்பது அ.ம.மு.க.வின் முத்திரை சின்னம்போல அமைந்துள்ளது. அம்மாவின் திரு உருவம் பொறித்த கொடி இங்கே பட்டொளி வீசி பறக்கிறது. இதை அமைத்த நிர்வாகிகளை பாராட்டுகிறேன்.

இங்கு கொடிக்கம்பம் அமைக்க இருப்பதை 6 மாதத்துக்கு முன்பு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்தோஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர். என்னை துவக்கி வைக்கவும் அழைத்தார்கள். அதற்கு நான் சம்மதித்தேன். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் திறப்பு விழா நடத்த முடியாது என்றேன். ஆனால் விரைவாக செயல்பட்டு தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் முன்பே இப்போது கொடி பறக்க விடப்பட்டுள்ளது. நமது கட்சி தொடங்கப்பட்டு 1 ஆண்டு முடிவதற்குள் 123 அடி உயர கம்பத்தில் கொடியேற்றப்பட்டு இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளில் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும். அடுத்த பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக அ.ம.மு.க. திகழும். அனைத்து தரப்பு மக்களும் நமது பக்கம் இருக்கிறார்கள். தென்காசி, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிகளில் நமது வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். குக்கர் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யவேண்டும்.

எதிரிகளையும் துரோகிகளையும் வீழ்த்துவோம். அனைத்து தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற அயராது பாடுபட வேண்டும். தமிழக மக்களுக்கு எப்போதும் அ.ம.மு.க. உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் மாநில இளைஞரணி செயலாளர் முத்துராஜ், இன்பத்தமிழன், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் நல்லதம்பி, பேரவை மாவட்ட செயலாளர் சிந்துமுருகன், பேரூர் கழக செயலாளர் சிட்டிபாபு, இளம்பெண்கள் பாசறை செயலாளர் பிரியா, மாணவரணி செயலாளர் காமாட்சி, நிர்வாகிகள் முத்துராமலிங்கம், இனியபாரதி, விக்னேஷ், சந்தோஷ் குமார், குமரேசன், போஸ், பொன்னுபாண்டியன், பொன்ராஜ், விவேகானந்தன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கொடியேற்று விழாவை தொடர்ந்து டி.டி.வி. தினகரன் ஸ்ரீவில்லிபுத்தூர் நகருக்கு வந்தார். அவருக்கு இந்திராநகர் அருகே ஒன்றிய அ.ம.மு.க சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் கழகம் சார்பில் காமராஜர் சிலை அருகே பால்குட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை முத்துராஜ் செய்திருந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் சார்பில் நாகமங்கலம், மல்லி உள்ளிட்ட இடங்களில் ஒன்றிய செயலாளர் காளிமுத்து தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டார். பின்னர் சிவகாசிக்கு புறப்பட்டார். பல இடங்களில் அவருக்கு கரகாட்டம், பொய்கால்குதிரை, தாரைதப்பட்டை முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. சிவகாசியில் இரவு அவர் தங்கினார்.

திருத்தங்கலில் நகர அ.ம.மு.க. செயலாளர் சரவணகுமாரின் சகோதரர் வேல்முருகன்-சிவசக்தி திருமணம் இன்று (திங்கட்கிழமை) காலை நடக்கிறது. விழாவுக்கு டி.டி.வி. தினகரன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்துகிறார்.

Related Tags :
Next Story