‘மக்கள் ஆதரவு இல்லாததால் அ.தி.மு.க.வினர் கூட்டணி தேடி அலைகிறார்கள்’ டி.டி.வி. தினகரன் பேட்டி
மக்கள் ஆதரவு இல்லாததால் அ.தி.மு.க.வினர் கூட்டணி தேடி அலைகிறார்கள் என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.
மதுரை,
மதுரையில் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அ.ம.மு.க. துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நாங்கள் மேல்முறையீடு செய்வோம். இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு கொடுங்கள் என நாங்கள் கேட்கவில்லை. எங்கள் கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று தான் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் எங்களுடன் தான் இருக்கிறார்கள். சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் வைக்கக்கூடாது என கூறியவர்களுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்திருக்கிறது.
தேர்தல் களத்தில் நாங்கள் இல்லை என சிலர் கூறி வருகின்றனர். ஆர்.கே.நகர் தேர்தலின் போது கூட இதனை கூறினார்கள். யார் தேர்தல் களத்தில் இல்லை என்பது, தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தெரியவரும். பொறுமையாக இருங்கள், பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வரும்போது தெரியும். வெற்றியோடு மதுரைக்கு வருவேன். அ.தி.மு.க. கூட்டணி பற்றி அன்புமணி ராமதாஸ் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் அது மானம்கெட்ட கூட்டணி. ஜெயலலிதாவின் தொண்டர்கள் 95 சதவீதம் பேர் எங்களுடன் இருக்கின்றனர். அ.தி.மு.க.வுக்கு மக்கள் ஆதரவு இல்லாததால் கூட்டணியை தேடி அலைகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். உடன் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.