சேலம் மாநகரத்தில் 2 மாதங்களில் சாலை விபத்துகளில் 16 பேர் பலி
சேலம் மாநகரத்தில் கடந்த 2 மாதங்களில் சாலை விபத்துகளில் 16 பேர் பலியாகி உள்ளனர்.
சேலம்,
சேலம் மாநகரத்தில் சாலை விபத்துக்களை தடுக்க மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக கடந்த ஆண்டு விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு நடைபெற்ற இடங்கள், அந்த இடத்தில் விபத்திற்கான காரணங்கள், விபத்தை குறைப்பதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதன்பேரில் தேவையான இடங்களில் சிக்னல் கம்பங்கள் அமைத்தல், சென்டர் மீடியன், விழிப்புணர்வு பதாகைகள் அமைத்தல் என விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிந்து ஓட்டுவதற்கும், சாலை விதிகளை பின்பற்றுமாறும் போலீசார் அறிவுறுத்தினர். இதுமட்டுமல்லாமல் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், சிக்னலை பின்பற்றாதவர்கள், அதிகமான பயணிகளை ஆட்டோவில் ஏற்றி செல்பவர்கள், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை இயக்குபவர்கள் மற்றும் சாலை விதிகளை மீறுபவர்கள் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். மேலும் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், கடந்த ஜனவரி மாதம் சாலை விபத்துக்களில் 9 பேர் இறந்துள்ளனர். பிப்ரவரி மாதத்தில் 7 பேர் இறந்துள்ளனர். 2 மாதத்தில் 16 பேர் இறந்துள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10 பேரும், பிப்ரவரி மாதத்தில் 13 பேரும் என 23 பேர் சாலை விபத்தில் இறந்துள்ளனர். கடந்த 2 மாதங்களில் நடந்த சாலை விபத்துக்களை, கடந்த ஆண்டின் 2 மாதங்களோடு ஒப்பிடும் போது சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளது. மேலும் சாலை விபத்துக்களை குறைக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றனர்.
Related Tags :
Next Story