மண்ணச்சநல்லூரில் விபத்தில் பள்ளி மாணவர் சாவு மற்றொருவர் படுகாயம்


மண்ணச்சநல்லூரில் விபத்தில் பள்ளி மாணவர் சாவு மற்றொருவர் படுகாயம்
x
தினத்தந்தி 4 March 2019 4:15 AM IST (Updated: 4 March 2019 2:44 AM IST)
t-max-icont-min-icon

மண்ணச்சநல்லூரில் விபத்தில் சிக்கிய மாணவர் பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

சமயபுரம்,

மண்ணச்சநல்லூர் கீழ காவல்காரத்தெருவை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மகன் சக்திவேல்(வயது 16). இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த கதிரவன் மகன் பிரகாசும்(17) நண்பர்கள். பிரகாஷ் அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். உறவினர்களுக்கு கோவில் பிரசாதம் வழங்கு வதற்காக நேற்று காலை சக்திவேலும், பிரகாசும் மண்ணச்சநல்லூரில் இருந்து நொச்சியத்திற்கு ஒரு மொபட்டில் சென்றனர். மொபட்டை சக்திவேல் ஓட்ட, பிரகாஷ் பின்னால் அமர்ந்திருந்தார். மண்ணச்சநல்லூரில் உள்ள ஒரு திருமணம் மண்டபம் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த ஒரு வாகனம் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயமடைந்தனர்.

அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் பரிதாபமாக இறந்தார். பிரகாசுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராயப்பன் மற்றும் போலீசார், சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் மாணவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Next Story