தக்கலை அருகே கிறிஸ்தவ ஆலயம் உள்பட 3 இடங்களில் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை


தக்கலை அருகே கிறிஸ்தவ ஆலயம் உள்பட 3 இடங்களில் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 4 March 2019 3:45 AM IST (Updated: 4 March 2019 3:15 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே கிறிஸ்தவ ஆலயம் உள்பட 3 இடங்களில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பத்மநாபபுரம்,

தக்கலை அருகே கல்குறிச்சியில் புனித சூசையப்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் அருகே குருசடியும் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பிரார்த்தனை முடிந்த பின்பு ஆலயத்தை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று அதிகாலையில் இரண்டு மர்ம நபர்கள் கதவை உடைத்து ஆலயத்திற்குள் புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த உண்டியலை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே ஆலயத்தின் உள்ளே மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதை அருகில் உள்ள பொதுமக்கள் பார்த்தனர். உடனே, அவர்கள் ஆலய நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். அத்துடன், சுற்றுப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆலய வளாகத்தில் திரண்டு மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர்.

இதை உணர்ந்த மர்ம நபர்கள் ஆலயத்தின் மேல்கூரையில் ஏறி, அருகில் இருந்த மரத்தின் வழியாக இறங்கி நைசாக தப்பி சென்றனர்.

இதையடுத்து, ஆலய நிர்வாகிகள் சோதனை செய்த போது, ஆலய வளாகத்தில் கொடிமரத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது. இந்த பணத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள் ஆலய கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கிருந்த உண்டியலை உடைக்க முயன்றபோது, சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டதால் தப்பி சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் ஆலயத்திற்குள் நுழையும் முன்பு, அதன் அருகே உள்ள குருசடியிலும் கைவரிசை காட்டியுள்ளனர். குருசடியில் உள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடி உள்ளனர்.மேலும், குருசடி அருகே உள்ள அம்மன் கோவிலிலும் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்து உள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது, 25 வயது மதிக்கத்தக்க இரண்டு வாலிபர்கள் கையில் கம்பியுடன் நடமாடும் காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து ஆலயம் உள்பட 3 இடங்களிலும் அந்த நபர்கள்தான் கைவரிசை காட்டியுள்ளதாக தெரிகிறது.

இதுதொடர்பாக தக்கலை போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். கிறிஸ்தவ ஆலயம் உள்பட 3 இடங்களில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story