நாடாளுமன்ற தேர்தலையொட்டி கர்நாடகத்தில் 58 ஆயிரத்து 186 வாக்குச்சாவடிகள் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் பேட்டி


நாடாளுமன்ற தேர்தலையொட்டி கர்நாடகத்தில் 58 ஆயிரத்து 186 வாக்குச்சாவடிகள் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் பேட்டி
x
தினத்தந்தி 4 March 2019 3:15 AM IST (Updated: 4 March 2019 3:53 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கர்நாடகத்தில் 58 ஆயிரத்து 186 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

பெங்களூரு, 

கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தேர்தல் கால அட்டவணை எப்போது அறிவிக்கப்பட்டாலும், தேர்தலை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ேதர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு முதல்கட்ட பயிற்சி முடிக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தேர்தலுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடிகளில் குறைந்தபட்ச அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு்ளது. கர்நாடகத்தில் தோ்தல் பணியில் 2.32 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

இது மட்டுமின்றி வாக்கு எண்ணிக்கைக்கு 30 ஆயிரம் பேரும், பிற பணிகளுக்கு 40 ஆயிரம் பேரும் என மொத்தம் 3 லட்சம் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாதுகாப்பு பணியில் 80 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

கர்நாடகத்தில் மொத்தம் 58 ஆயிரத்து 186 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகள் அனைத்தும் தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ளன. தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் விடுபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்வது தொடர்பாக நாட்டுப்புற கலைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. கல்வி நிலையங்களின் அளவில் 13 ஆயிரத்து 553 வாக்காளர் விழிப்புணர்வு தூதர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது யாரும் சந்தேகப்பட வேண்டிய அவசியம் இல்லை. அந்த எந்திரங்களில் எந்த விதமான தவறும் செய்ய முடியாது. இணையதள மொழியில் சொல்ல வேண்டுமென்றால், அந்த எந்திரங்களை ‘ஹேக்’ செய்ய வாய்ப்பே இல்லை. அந்த எந்திரங்களில் தவறு செய்ய முடியாது என்பது ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.

திறமை வாய்ந்த 5 நிபுணர்களின் மேற்பார்வையில் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் இந்த எந்திரங்களை உற்பத்தி செய்கிறது. அந்த எந்திரங்கள் 300 வகையான பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கி உள்ளது. அதனால் அதில் தவறு செய்யவே முடியாது. அத்துடன் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய வி.வி.பேட் எந்திரமும் இணைக்கப்படுகிறது.

மக்கள்தொகை அதிகம் உள்ள நமது நாட்டில், இதுபோன்ற சந்தேகங்களை எழுப்புவது என்பது சகஜ மானது. சந்ேதகங்களை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்வோம். சந்தேகங்கள், குழப்பங்களுக்கு திருப்திகரமான விளக்கத்தை அளிப்பது எங்கள் கடமை.

அதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் 200 பேருக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று வாக்குப்பதிவு எந்திரங்களில் தவறு செய்ய முடியாது என்பதை எடுத்துக்கூறி விளக்கி வருகிறார்கள்.

பள்ளி-கல்லூரிகள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பற்றிய உண்மை தன்மை குறித்து எடுத்துக்கூறப்படும். சட்டம்-ஒழுங்கை காப்பாற்றவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் 10 ஆயிரம் துணை ராணுவ வீரர்களை அனுப்பும்படி மத்திய அரசிடம் கோரிக்கை விடப்படும். கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு 87 ஆயிரத்து 280 மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், 78 ஆயிரத்து 560 கட்டுப்பாட்டு எந்திரம் பயன்படுத்தப்படுகிறது. 1.32 லட்சம் பாட்டிலில் அழியாத மை வாங்கப்பட்டு, தயாராக வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சஞ்சீவ்குமார் கூறினார்.

Next Story