பட்டிவீரன்பட்டியில் டபிள்யூ.பி.ஏ.சவுந்திரபாண்டியனாருக்கு மணிமண்டபம் அமைக்கக்கோரி உண்ணாவிரதம்


பட்டிவீரன்பட்டியில் டபிள்யூ.பி.ஏ.சவுந்திரபாண்டியனாருக்கு மணிமண்டபம் அமைக்கக்கோரி உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 3 March 2019 10:45 PM GMT (Updated: 2019-03-04T03:58:21+05:30)

பட்டிவீரன்பட்டியில் டபிள்யூ.பி.ஏ.சவுந்திரபாண்டியனாருக்கு மணிமண்டபம் அமைக்கக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

பட்டிவீரன்பட்டி,

டபிள்யூ.பி.ஏ.சவுந்திரபாண்டியனாரின் நினைவிடம் பட்டிவீரன்பட்டியில் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் இந்த நினைவிடத்தில் அரசியல் கட்சி பிரமுகர்களும், நாடார் சமுதாயத்தை சேர்ந்த பல தலைவர்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதையொட்டி டபிள்யூ.பி.ஏ.சவுந்திரபாண்டியனாருக்கு அவர் பிறந்த ஊரான பட்டிவீரன்பட்டியில் மணிமண்டபம் அமைக்கக்கோரியும், அவரது பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்கக்கோரியும் பட்டிவீரன்பட்டி பொதுமக்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு தலைமை தாங்கி இந்து நாடார்கள் உறவின்முறை பரிபாலன சங்க தலைவர் ராஜாராம் பேசியதாவது:-

நாட்டில் எத்தனையோ தலைவர்கள் தோன்றி மறைகிறார்கள். ஆனால் அதில் ஒருசிலர் தான் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கின்றனர். அவ்வாறு முக்கியத்துவம் பெற்ற தலைவர்களில் டபிள்யூ.பி.ஏ.சவுந்திரபாண்டியனாரும் ஒருவராவார். இவருடைய பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.

இவர் வாழ்ந்த இந்த மண்ணில் அரசு மணிமண்டபம் கட்ட வேண்டும். சென்னையில் உள்ள பாண்டி பஜார் என்பதன் உண்மையான பெயர் சவுந்திரபாண்டியனார் அங்காடி என்பதாகும். அதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சவுந்திரபாண்டியனாரின் வாழ்க்கை வரலாற்றை இளைய தலைமுறையினரும், மாணவர்களும் படிக்கும் வண்ணம் அவருடைய வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும்.

1933-ம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை இயக்க மாநாட்டில் சொத்தில் பெண்களுக்கு சமபங்கு அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார். அதை தனது குடும்பத்தில் நிறைவேற்றி காண்பித்தார். காபி மற்றும் ஏலக்காய் பயிரிடுவோர் கூட்டுறவு சங்கத்தை நிறுவி நாட்டு மக்களுக்கு அர்பணித்தார்.

டபிள்யூ.பி.ஏ. சவுந்திரபாண்டியனாருக்கு பட்டிவீரன்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் மணிமண்டபம் கட்டி அவரது பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உண்ணாவிரதத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story