பழனி பகுதியில் வனவிலங்கு வேட்டையை தடுக்க சிறப்புக்குழு - வனச்சரகர் தகவல்


பழனி பகுதியில் வனவிலங்கு வேட்டையை தடுக்க சிறப்புக்குழு - வனச்சரகர் தகவல்
x
தினத்தந்தி 4 March 2019 3:58 AM IST (Updated: 4 March 2019 3:58 AM IST)
t-max-icont-min-icon

பழனி வனப்பகுதியில் விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க 7 பேர் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டு, தீவிர ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனச்சரகர் கணேஷ்ராம் தெரிவித்துள்ளார்.

பழனி,

கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுத்தீ பிடித்ததில் விலை உயர்ந்த மரங்கள், உயிரினங்கள் தீயில் கருகின. இதைத்தொடர்ந்து வனப்பகுதியை ஓட்டியுள்ள விளைநிலங்களுக்கு தீவைப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள், தனியார் தோட்ட நிர்வாகத்துக்கு வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்தனர். மேலும் கொடைக்கானலுக்கு மலைப்பாதை வழியாக செல்பவர்களை கண்காணிக்கவும், அவர்கள் எளிதில் தீப்பற்றும் வகையிலான பொருட்களை கொண்டு செல்வதை தடுக்க வனத்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

அத்துடன் மலைக்கிராம மக்களுடன் இணைந்து வனவளத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வும், காட்டுத்தீ பிடித்தால் முதற்கட்டமாக எவ்வாறு அணைக்க வேண்டும், விரைவாக தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பது குறித்த பயிற்சிகளை வனத்துறையினர் மேற்கொண்டனர். இந்நிலையில் வனவிலங்குகளை வேட்டையாடுபவர்களால் மலைப்பகுதியில் தீ வைக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருவது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க 7 வனப்பணியாளர்களை கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் வனப்பகுதியில் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பழனி வனச்சரகர் கணேஷ்ராம் கூறுகையில், வனவிலங்கு சட்டப்படி வனவிலங்குகள், உயிரினங்களை வேட்டையாடுவது, வனத்தில் இறந்துகிடக்கும் விலங்குகளின் உடல்களை சேகரித்தல், விற்பனை செய்தல், வனப்பகுதியில் சமைத்தல் போன்றவை சட்டவிரோத செயல்களாகும். மேலும் சிவராத்திரியை முன்னிட்டு மலையடிவார பகுதி மக்கள் பாரி வேட்டை என்ற பெயரில் வனவிலங்குகளை வேட்டையாடுவார்கள். வனவிலங்கு வேட்டை சட்டப்படி குற்றமாகும்.

எனவே மக்கள் மூட நம்பிக்கைகளை கைவிட்டு வனவளத்தை பெருக்கிட வனத்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் வனவிலங்கு வேட்டையை தடுக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டு, அவர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மேற்கண்ட செயல்களில் ஈடுபட்டால் 3 முதல் 7 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும்’ என்றார்.

Next Story