கொடைக்கானலில் அணையில் மூழ்கிய தொழிலாளி கதி என்ன?


கொடைக்கானலில் அணையில் மூழ்கிய தொழிலாளி கதி என்ன?
x
தினத்தந்தி 4 March 2019 4:15 AM IST (Updated: 4 March 2019 3:58 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் பழைய அணையில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர்.

கொடைக்கானல்,

கொடைக்கானல் நகர் பாக்கியபுரம் அண்ணா ராமசாமி நகரை சேர்ந்தவர் பெர்ணான்ட். இவருடைய மகன் ஆபிரகாம் (வயது 21). கூலித்தொழிலாளி. இவர், நேற்று பகல் நேரத்தில் தனது நண்பர்களான சுரேஷ்குமார், விக்னேஷ், ஹரிஹரன், ரமேஷ் மற்றும் பலருடன் நகருக்கு குடிநீர் வழங்கும் பழைய அணை பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அமர்ந்து அவர்கள் மதுபானம் அருந்தியதாக கூறப்படுகிறது.

அப்போது குடிபோதை அதிகமானதில் ஆபிரகாம், அணையின் ஒரு கரையில் தனது உடைகளை கழற்றி வைத்துள்ளார். பின்னர் தண்ணீரில் இறங்கி அணையின் மறுகரைக்கு செல்ல முயன்றதாக தெரிகிறது. அணையில் தற்போது 17 அடி நீர்இருப்பு உள்ளது. நீரின் ஆழமான பகுதிக்கு சென்ற அவரை காணவில்லை. இதை பார்த்த அவருடைய நண்பர்கள் அச்சமடைந்தனர்.

இதுகுறித்து கொடைக்கானல் போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு அலுவலர் குணசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் தனிக்கொடி ஆகியோர் தலைமையில் போலீசாரும், தீயணைப்புபடையினரும் அணையில் சுமார் 4 மணி நேரம் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

ஆனால் அவர் கிடைக்கவில்லை. பின்னர் இரவு நேரமானதால், தேடும் பணியை நாளை (இன்று) காலை தொடரும் என்று தீயணைப்பு படையினரும், போலீசாரும் கூறி சென்றனர். இதனிடையே பலத்த பாதுகாப்பு உள்ள பழைய குடிநீர் அணையில் இவர்கள் எப்படி சென்றார்கள்? என்பது குறித்து நகராட்சி நிர்வாகம் விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story